டெல்லி சட்டசபை தேர்தல்: 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.;
புதுடெல்லி,
டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற பிப்ரவரி 23-ந் தேதி நிறைவடைகிறது. இதனால் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி களத்தில் தீவிரமாக இறங்கி வேலை பார்க்கிறது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அக்கட்சி தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த மாதம் 21-ந் தேதி அறிவித்தது. அதில் 11 பேர் இடம் பெற்று இருந்தனர்.
இதனையடுத்து மேலும் 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை கடந்த 9-ம் தேதி ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. அதில் மணீஷ் சிசோடியா உள்பட 2 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். அப்போது அறிவிக்கப்பட்ட 20 தொகுதிகளில் 14 எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 2-வது பட்டியலுடன் சேர்த்து இதுவரை 31 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி அதிஷி கல்காஜி தொகுதியிலும், சத்யேந்தர் ஜெயின் மற்றும் கோபால் ராய் ஆகியோர் ஷகுர் பஸ்தி மற்றும் பாபர்பூரில் போட்டியிடுகின்றனர்.