கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம்; திண்டுக்கல் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் சப்ளை செய்த திண்டுக்கல் டெய்ரி நிறுவனம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-09-25 23:20 GMT

கோப்புப்படம் 

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு, பிரசாதங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அந்தக் கலப்பட நெய்யை விதிமுறைகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு தமிழகத்தில் உள்ள ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் சப்ளை செய்ததாகக் கூறப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி கிழக்குப் போலீஸ் நிலையத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா புகார் அளித்துள்ளார்.

அதில் இந்த ஆண்டு மே மாதம் 15-ந்தேதி நெய் சப்ளை செய்ய ஆர்டர் செய்யப்பட்டது. அதன்பேரில் தமிழ்நாடு மாநிலம் திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 12, 20, 25 மற்றும் ஜூலை மாதம் 6 மற்றும் 12-ந்தேதிகளில் 5 டேங்கர்களில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்தது. இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்தின் தரம் குறித்து தேவஸ்தானத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதன்பேரில் ஜூலை மாதம் 6 மற்றும் 12-ந்தேதிகளில் ஏ.ஆர். டெய்ரி சப்ளை செய்த நெய்யை திருப்பதி தேவஸ்தானம் தேசிய பால் பொருட்கள் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. அந்த ஆய்வகம் நடத்திய பரிசோதனையில் நெய்யில் தாவர எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக உறுதி செய்தது.

இதையடுத்து ஜூலை மாதம் 22, 23 மற்றும் 27-ந்தேதிகளில் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திடம் காரணம் கேட்டு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது. நெய்யில் கலப்படம் செய்யப்படவில்லை என ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் செப்டம்பர் மாதம் 4-ந்தேதி பதில் அளித்தது. எனவே விதிமுறைகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் சப்ளை செய்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி கிழக்குப் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்