ஆந்திரா, தெலுங்கானா மழை வெள்ள பாதிப்பு - ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர்

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Update: 2024-09-03 08:13 GMT

பெங்களூரு,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

கொட்டி தீர்க்கும் கனமழையால் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 4½ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி இருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'கனமழையால் இரண்டு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருப்பது என்னை மிகவும் பாதித்துள்ளது. இந்த துயரத்தில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன். வெள்ளப் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக தலா ரூ.50 லட்சம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளின் முதல்- மந்திரி நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்துக்கொள்கிறேன்', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்