மணிப்பூரில் 70 ஏக்கர் கசகசா பயிர் அழிப்பு

சட்டவிரோதமாக பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-12-17 07:05 GMT

கோப்புப்படம்

இம்பால்,

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் போலீசார், வனத்துறை மற்றும் அசாம் ரைபிள் படையின் கூட்டு சோதனையில் நேற்று சுமார் 70 ஏக்கரில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட கசகசா அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலே, தோரா மற்றும் சாம்புங் கிராமங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த கசகசா பயிர்கள் போதைக்கு பயன்படுத்த சட்டவிரோதமாக பயிரிடப்பட்டதால் அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அப்போது அந்த தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 13 குடிசைகளும் எரிக்கப்பட்டன. இங்கு சட்டவிரோதமாக பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.

கடந்த வாரம், மணிப்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் உக்ருல் மாவட்டத்தில் உள்ள ஷைகாய் குல்லென் மலைத்தொடரில் சுமார் 55 ஏக்கர் சட்டவிரோத கசகசா சாகுபடியை அழித்துள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 12 மாவட்டங்களில் 19 ஆயிரத்து 135 ஏக்கர் சட்டவிரோத கசகசா பயிர்களை மணிப்பூர் அரசு அழித்துள்ளது. இதில் கங்போக்பி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 454 ஏக்கரும், உக்ருல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 348 ஏக்கரும், சுராசந்த்பூரில் 2 ஆயிரத்து 713 ஏக்கரும் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்