விமானத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
விமானத்தில் கடத்திவரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.7½ கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொச்சி,
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் மூலம் அடிக்கடி போதைப்பொருட்கள், தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதனை கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாங்காக்கில் இருந்து வந்த விமானம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த 3 பயணிகள் மீது சுங்கத் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது கலப்பின கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்கள் கடத்தி வந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.7.47 கோடி ஆகும். இதனை தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப் பட்டது. அதனை கடத்தி வந்ததாக கோழிக்கோடு முகமது ஜாகிர், எர்ணாகுளம் நிசாமுதீன், மலப்புரம் ஜம்ஷீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.