கேரளாவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத 104 கிலோ தங்கம் பறிமுதல்

கேரளாவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;

Update: 2024-10-24 12:51 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தங்க நகை தயாரிப்பு நிறுவனங்களில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 6 மாதங்களில் நகை தயாரிப்பாளர்கள் பலர் ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிரடி சோதனைக்கு 'டோர்ரே டெல் ஓரோ' என ஸ்பானிஷ் மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 'தங்க கோபுரம்' என்பதாகும். நேற்று மாலை தொடங்கிய இந்த சோதனையானது, இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்றது. சுமார் 700 அதிகாரிகள், 78 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனை ஜி.எஸ்.டி. சிறப்பு ஆணையர் ஆப்ரகாம் ரென் தலைமையில் நடைபெற்றது.

இந்த சோதனையில் ரசீது தயாரித்தல் மற்றும் வரி செலுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராத 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் 75 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை குறித்த திட்டங்களை அதிகாரிகள் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். இந்த சோதனைக்காக 'கல்வி சுற்றுலா' என்ற பெயர் பலகையைக் கொண்ட பேருந்துகளில், மாநிலம் முழுவதும் இருந்து அதிகாரிகள் திருச்சூருக்கு வரவழைக்கப்பட்டனர். இந்த 'டோர்ரே டெல் ஓரோ' சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்