மத்திய பிரதேச இடைத்தேர்தலில் 1 மணி நிலவரம்; புத்னி-51.16 சதவீதம், விஜய்ப்பூர்-54.86 சதவீதம்
மத்திய பிரதேசத்தின் புத்னி தொகுதிக்கான இடைத்தேர்தலில், பா.ஜ.க. வேட்பாளராக ராமகாந்த் பார்கவாவும், காங்கிரஸ் வேட்பாளராக ராஜ்குமார் பட்டேலும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேச சட்டசபையின் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில், நண்பகல் 1 மணி நிலவர வாக்குப்பதிவு விவரம் வெளிவந்துள்ளது. இதன்படி, செஹோர் மாவட்டத்தின் புத்னி தொகுதியில் 51.16 சதவீத வாக்குப்பதிவும், ஷியோப்பூர் மாவட்டத்தின் விஜய்ப்பூர் தொகுதியில் 54.86 சதவீத வாக்குப்பதிவும் நடந்துள்ளது.
இதற்கு முன்பு காலை 11 மணியளவில் புத்னி தொகுதியில் 36.00 சதவீத வாக்குப்பதிவும், விஜய்ப்பூர் தொகுதியில் 38.26 சதவீத வாக்குப்பதிவும் நடந்துள்ளது. இதேபோன்று காலை 9 மணியளவில் புத்னி தொகுதியில் 16.90 சதவீத வாக்குப்பதிவும், விஜய்ப்பூர் தொகுதியில் 17.86 சதவீத வாக்குப்பதிவும் நடந்தது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் மத்திய வேளாண் மந்திரியான சிவராஜ் சிங் சவுகானின் கோட்டையாக புத்னி தொகுதி இருந்து வருகிறது. அவர் சமீபத்தில் விதிஷா தொகுதிக்கான எம்.பி.யாக தேர்வானார். இதனை தொடர்ந்து, காலியான அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில், பா.ஜ.க. வேட்பாளராக ராமகாந்த் பார்கவாவும், காங்கிரஸ் வேட்பாளராக ராஜ்குமார் பட்டேலும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
விஜய்ப்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான ராம்நிவாஸ் ராவத், காங்கிரசில் இருந்து விலகி, மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த ஏப்ரலில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். இதனையடுத்து, காலியான அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில், பா.ஜ.க. சின்னத்தில் ராவத் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் முகேஷ் மல்கோத்ரா நிறுத்தப்பட்டு உள்ளார்.