அதிக அளவு மருந்து மாத்திரை சாப்பிடுகிறீர்களா..? சிறுநீரக ஆரோக்கியத்தில் கவனமா இருங்க
சிறுநீரக செயல்பாட்டை கண்டறியும் ரத்த பரிசோதனைகளை செய்த பின்னரே மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.;
பல்வேறு வகையான நோய்களுக்கு நாம் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உலகில் உள்ள மொத்த சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளில், 20 சதவிகிதத்தினருக்கு மருந்துகளின் பக்க விளைவுகளே காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மருந்துகள் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும் முக்கிய காரணிகளாக கருதப்படுவது:
1. 60 வயதை கடந்தவர்கள்.
2. நீரிழிவு நோயாளிகள்.
3. இதயத்திறனழப்பு நோயாளிகள்
4. அதிக எண்ணிக்கையில் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் மருந்துகளை உட்கொள்பவர்கள்.
5. செப்ஸிஸ் (தொற்று காரணமாக ரத்தத்தில் நச்சுத்தன்மை உண்டாக்குதல்)
சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளில் முக்கியமானவையாக கருதப்படுதுவது:
1.வலி நிவாரண மருந்துகள் (அஸிட்அமினோபென், ஆஸ்பிரின், என்.எஸ்.ஏ.ஐ.டி)
2.மனநிலை பாதிப்பிற்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகள் (லித்தியம், அமிட்ரிப்டலின், பென்சோடயசிபின்)
3.நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (அமினோகிளைக்கோசைட்ஸ், பெனிசிலின், கெபல்லோஸ்போரின், சல்போனமைட்ஸ், வான்கோமைசின், ஏசைகிளோவிர்)
4.இருதய நோய்களுக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகள் (எனலாப்ரில், ராமிபிரில்,ஸ்டேடின்,குளோபிட்ரோகல்)
5.வயிற்றுப் புண்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் (லேண்சோப்ரசோல், ஓமிப்ரசோல்)
ஆகையால், மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே நீங்கள் மருந்துகளை எப்பொழுதும் உட்கொள்ள வேண்டும். சிறுநீரக செயல்பாட்டை கண்டறியும் ரத்த பரிசோதனைகளை செய்த பின்னரே மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மருத்துவரின் அனுமதியின்றி மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி எக்காரணம் கொண்டும் உட்கொள்ளக் கூடாது.
தலைசுற்றல்
சிலர் சில நேரங்களில் தரையில் அமர்ந்து எழுந்தாலும், கீழே குனிந்து நிமிர்ந்தாலும் தலைசுற்றல் ஏற்படுகிறது. ஆனால் அது ஓரிரு வினாடிகளில் சரியாகிறது. இது ஆர்த்தோஸ்டாட்டிக் ஹைப்போடென்ஷன் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். தரையில் அமர்ந்து எழுந்திருக்கும்போதும் அல்லது குனிந்து நிமிரும்போதும் ரத்த அழுத்தம் குறைவதால் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது:
1. 65 வயதை கடந்தவர்கள் (இருதயம் மற்றும் கழுத்தில் உள்ள ரத்த நாளங்களின் அருகில் உள்ள பேரோரிசப்டார்கள் சரிவர செயல்படாததால் தலைசுற்றல் ஏற்படுகிறது)
2. நீர் இழப்பு (ஜுரம், பேதி, வாந்தி, அதிகமாக வியர்த்தல் ஆகியவை நீரிழிப்புக்கு வழிவகுக்கின்றன)
3. இருதய நோய் பாதிப்பு: (மாரடைப்பு, இருதய செயலிழப்பு, குறைந்த இரத்த இதயத்துடிப்பு, இதய வால்வ்/தடுக்கிதழ் பிரச்சனைகள்)
4. நீரிழிவு நோய்.
5. இரத்தசோகை.
6. அகச்சுரப்பியல் அல்லது என்டோக்கிரைனாலஜி பிரச்சனைகள்: (அடிசன் நோய் மற்றும் தைராய்டு நோய்)
7.பார்க்கின்சன் போன்ற நரம்பியல் நோய் பாதிப்புகள்.
8. சாப்பிட்டவுடன் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தம் (குறிப்பாக வயதானவர்களுக்கு)
9. உயர் ரத்த அழுத்தத்திற்காக உட்கொள்ளும் மாத்திரைகள் (பீட்டா பிளாக்கர்ஸ், ஆல்பா பிளாக்கர்ஸ், கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், எனலாப்பிரில் போன்ற மருந்துகள்)
10.அதிக வெப்பநிலை: (இச்சூழ்நிலையில் அதிக வியர்வை வெளிப்பட்டு அது நீர் இழப்பை ஏற்படுத்துகிறது)
11. மதுப்பழக்கம்.
தலைசுற்றல் ஏற்படுவதற்கு மேற்கூறிய காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசித்து தகுந்த பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை பெற வேண்டும்.