'W' நிலையில் குழந்தைகள் உட்கார்ந்தால்...

'W' வடிவ நிலையில் அடிக்கடி உட்காரும்போது, கால்கள் மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளில் இறுக்கம் உண்டாகும். தொடை எலும்புகள், இடுப்பு தசைகள் மற்றும் தசைநார் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.

Update: 2023-06-11 01:30 GMT

குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் புரண்டு படுக்கவும், தவழ்ந்து செல்லவும், முழங்காலிட்டு உட்காரவும் ஆரம்பிப்பார்கள். சில குழந்தைகள் முழங்கால்களை மடக்கியவாறு, இரண்டு கால்களையும் உடலுக்கு பக்கவாட்டில் நீட்டியபடி உட்காருவார்கள்.

இந்த நிலை பார்ப்பதற்கு ஆங்கில எழுத்து 'W' வடிவில் இருக்கும். குழந்தைகள் இப்படி உட்காருவது ஆரம்பக்கட்ட வளர்ச்சி நிலையில் இயல்பானதுதான். ஆனால் குறிப்பிட்ட வயதிற்குப் பின்பும் இவ்வாறு தொடர்ந்தால் கவனிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் இது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும்.

குழந்தைகளின் கால் தசைகள் மற்றும் எலும்புகள் உறுதியாக இல்லாவிடில் 'W' நிலையில் உட்காருவார்கள். இவ்வாறு கால்களை அழுத்தி உட்காரும்போது, தசைகளில் அதிக அழுத்தம் உண்டாகும்.

இதனால் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டு, ஒரே இடத்தில் உட்காரும் நிலை ஏற்படும். இப்படியே தொடர்ந்தால், நடக்கும் போது அடிக்கடி விழுதல், நடையில் தடுமாற்றம், உடல் வளர்ச்சியில் எதிர்மறையான மாற்றம், ஒழுங்கற்ற தோற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

குழந்தைகள் வளரும்போது, அந்தந்த வயதிற்கேற்ப நடப்பது, உட்காருவது, படுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். இவை இல்லாமல், வழக்கத்திற்கு மாறாக அவர்களின் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் தெரிந்தால், அதை உடனடியாக கவனிக்க வேண்டும். ஏனெனில் இது, இடுப்பு எலும்பு வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

'W' வடிவ நிலையில் அடிக்கடி உட்காரும்போது, கால்கள் மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளில் இறுக்கம் உண்டாகும். தொடை எலும்புகள், இடுப்பு தசைகள் மற்றும் தசைநார் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும். இது, உடலின் இயல்பான இயக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்.

இதை ஆரம்பத்திலேயே கவனித்தால் சில பயிற்சிகள் அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். அவை:

குழந்தைகளை ஒரு கால் மீது மற்றொரு காலைப் போட்டு அமரவைத்து பழக்க வேண்டும். இவ்வாறு இரண்டு கால்களையும் மாற்றிப் போட்டு பழக்கினால் கால் தசைகள் வலுவாகும். காலைத் தொங்கவிட்டபடி உட்கார வைப்பது, பக்கவாட்டில் உட்காரச் செய்வது, மண்டியிட்டு உட்காருவது, கால்களை நீட்டி மடக்குவது போன்ற பயிற்சிகளை அளிக்கலாம். கால்களை அடிக்கடி நீட்டி மடக்கும்போது, கால் தசைகளில் ஏற்படும் அழுத்தம் குறையும்.

உயரம் மற்றும் தூரத்தில் உள்ள பொருட்களை எடுக்க ஊக்குவிப்பதுபோல் குழந்தையுடன் விளையாடலாம். இது குழந்தையின் முதுகுத்தண்டுப் பகுதியில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும்.

உங்கள் குழந்தை 'W' வடிவத்தில் உட்காரும்போதெல்லாம், சரியான நிலையில் உட்காரும்படி அறிவுறுத்துங்கள். தரையில் உட்காருவதற்கு பதிலாக சிறிய நாற்காலி கொடுத்து அதில் உட்காரச் சொல்லுங்கள். 'W' வடிவ நிலையைத் தவிர்த்து மற்ற நிலைகளில் எவ்வாறு உட்காருவது என்று குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்