இரும்பு சமையல் பாத்திரங்கள் பராமரிப்பு
இரும்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு, முடிந்தவரை இளம் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அவை துருப்பிடிப்பதை தடுக்க முடியும். சுத்தம் செய்த பிறகு இரும்பு பாத்திரங்களை வெயிலில் உலர்த்துவதும் அவசியமானதாகும்.
சிறு வயதிலேயே நரைமுடி பிரச்சினை, கருப்பை நீர்க்கட்டி, தைராய்டு சுரப்பியில் கோளாறு என தற்போதைய இளைய தலைமுறை பல பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதற்கு ஹீமோகுளோபின் போன்ற மைக்ரோ நியூட்ரியன்ட்களின் குறைபாடும் ஒரு காரணமாகும். இரும்பு பாத்திரங்களில் உணவு சமைப்பது, இதுபோன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கும், உடலில் ஆக்சிஜன் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்குமான எளிய வழியாகும்.
அதேசமயம், இரும்பால் ஆன பாத்திரங்களை பாதுகாப்பான முறையில் பராமரிப்பது சற்றே சவாலான விஷயமாகும்.
இரும்பு பாத்திரங்களை அதிக நேரம் தண்ணீரில் வைப்பதை தவிர்க்க வேண்டும். சமைக்கும்போது உணவுப் பொருட்கள் இரும்பு பாத்திரத்தில் அடிப்பிடித்து இருந்தால், அவற்றை 15 நிமிடங்களுக்கு மிதமான சுடுநீரில் ஊறவைத்து தேய்த்தாலே சுத்தமாகிவிடும்.
இரும்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு, முடிந்தவரை இளம் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அவை துருப்பிடிப்பதை தடுக்க முடியும். சுத்தம் செய்த பிறகு இரும்பு பாத்திரங்களை வெயிலில் உலர்த்துவதும் அவசியமானதாகும்.
புதிதாக வாங்கிய இரும்பு பாத்திரங்களை நேரடியாக சமையலுக்கு பயன்படுத்துவது சற்றே சிரமமானது. அதில் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், செக்கு எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒரு எண்ணெய்யை நன்றாக பூசவும். பின்பு அதை அடுப்பில் வைத்து, ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய வெங்காயத்தை போட்டு மிதமான தீயில் வதக்க வேண்டும். 20 முதல் 40 நிமிடங்களுக்கு, வெங்காயம் கருகும் வரை வைத்திருந்து பின்னர் அடுப்பை அணைக்கவும். அதன்பிறகு பாத்திரத்தை கழுவி சுத்தம் செய்து வெயிலில் காய வைக்கவும். பின்பு அந்த இரும்பு பாத்திரத்தை எளிதாக சமையல் செய்ய பயன்படுத்த முடியும்.
புதிதாக வாங்கிய இரும்பு பாத்திரத்தில் தக்காளி, ஆப்பிள் சாஸ், புளி, வினிகர், ஒயின், எலுமிச்சை போன்ற புளிப்பு சுவை நிறைந்த உணவுகளை சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். புளிப்பானது பாத்திரத்தில் படிந்து அதை விரைவாக துருப்பிடிக்கச் செய்யும். ஆகையால் வாங்கிய ஒரு மாதம் வரை புளிப்பு உணவுகளைத் தவிர்த்து மற்ற உணவுகளை சமைக்கலாம்.
இரும்பு பாத்திரத்தை துடைத்து வைக்கும்போது அதில் சிறிது எண்ணெய் பூசி வைப்பது நல்லது. இதை உணர்த்தும் வகையிலேயே இரும்பு தோசைக்கல்லை அடிக்கடி தேய்த்துக் கழுவக் கூடாது என்று கூறுவார்கள்.