தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவது நல்லதா?
ஆயுர்வேத மருத்துவத்தின்படி தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடும்போது, மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான குளுக்கோஸ் போதுமான அளவு கிடைக்கும். தயிர் மற்றும் சர்க்கரை கலவை, உடலின் ஆற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.
நாம் தினசரி சாப்பிடும் உணவில் தவறாமல் இடம் பிடிக்கவேண்டியது தயிர். மதிய உணவு மெனுவில் குழம்பு, கூட்டு, பொரியல் என பலவகைகள் இருந்தாலும், உணவு உண்ட நிறைவைக் கொடுப்பது தயிர்தான். பாலில் இருந்து ஏராளமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் தயிருக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
குடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும், வைட்டமின் ஏ, ஈ, சி, பி2, பி12 மற்றும் கரோட்டினாய்டு போன்ற அத்தியாவசிய சத்துக்களும் தயிரில் நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை விரும்புவார்கள். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நன்மை ஏற்படுமா? என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
ஆயுர்வேத மருத்துவத்தின்படி தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடும்போது, மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான குளுக்கோஸ் போதுமான அளவு கிடைக்கும். தயிர் மற்றும் சர்க்கரை கலவை, உடலின் ஆற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். சருமம் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கச் செய்யும்.
தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் செரிமான மண்டலம் குளிர்ச்சி அடையும். வயிற்றில் உருவாகும் அதிக அளவிலான அமிலச் சுரப்பும், அதனால் உண்டாகும் நெஞ்செரிச்சலும் கட்டுப்படும். மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மசாலா மற்றும் காரம் காரணமாக ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறையும். மலச்சிக்கல், வயிற்று பொருமல் போன்ற பிரச்சினைகளும் தீரும்.
காலையில் எழுந்தவுடன், உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கப் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொற்றினால் ஏற்படும் எரிச்சல் குணமாகும். மேலும் இது சிறுநீர் குழாயை சுத்தப்படுத்தி குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
உடல் பருமன் பிரச்சினையால் சிரமப்படுபவர்கள், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உடலில் அதிகப்படியான கலோரிகள் சேர்வதற்கு வழிவகுத்து உடல் எடையை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்ப்பது நல்லது. சளி, ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளால் அவதிப் படுபவர்களும், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.