ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும் நாமக்கல் ரெயில் நிலையம்

நாமக்கல்லில் சுமார் ரூ.6 கோடியில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் காரணமாக ரெயில் நிலையம் நவீனமயமாக மாறி வருகிறது. தேவைகள் என்ன? பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-07-30 18:45 GMT

ரெயில் நிலையம்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட தலைநகரங்களுக்கு கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன்பே ரெயில் வசதி கிடைத்து விட்டது. ஆனால் நாமக்கல் நகருக்கு பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு தான் ரெயில்வசதி கிடைத்தது.

தற்போதைய நிலவரப்படி நாமக்கல் வழியாக சென்னை, பெங்களூரு, ஓசூர், காட்பாடி, திருவள்ளூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு போன்ற பகுதிகளுக்கு தினசரியும், மும்பை, புனே போன்ற பகுதிகளுக்கு வாரத்தில் 5 நாட்களும், அனந்தபூர், தர்மாவரம், குண்டக்கல், மந்த்ராலயம், சோலாபூர் பகுதிகளுக்கு வாரத்தில் 4 நாட்களும், அர்சிகிரே, ஹூப்ளி, தர்வார், பெலகாவி, மீரஜ் போன்ற பகுதிகளுக்கு வாரத்தில் 3 நாட்களும், மானாமதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், சூரத், வதோதரா, அகமதாபாத் ஆகிய பகுதிகளுக்கு வாரத்தில் 2 நாட்களும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ராஜ்கோட், ஒகா, அபூரோடு, ஜோத்பூர், பிகானீர், ஸ்ரீ கங்காநகர், திருப்பதி, கடப்பா, கூட்டி, கூர்நூல், காசெகுடா, அவுரங்காபாத் போன்ற பகுதிகளுக்கு வாரத்தில் ஒரு நாளும் ரெயில்வசதி உள்ளது.

ஜனவரியில் முடியும்

இருப்பினும் இந்த ரெயில்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ்நிலையத்திற்கு போதிய பஸ் வசதி இல்லாததே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் ரெயில் நிலையத்தை யொட்டி கொசவம்பட்டி ஏரி அமைந்து இருப்பதால், அப்பகுதி போதிய வளர்ச்சி அடையாமல் இருப்பதும் மற்றொரு காரணம் என ரெயில் பயணிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையே நாமக்கல் ரெயில் நிலையத்தை நவீனமயமாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக கணிசமான தொகையை ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் நடைபாதை மேம்பாலம், பூங்கா அமைத்தல், எஸ்கலேட்டர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட உள்ளது. தற்போது தொடங்கி உள்ள இந்த பணிகள் வருகிற ஜனவரி மாதத்திற்குள் முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ரூ.6 கோடியில் மேம்பாட்டு பணிகள்

இது குறித்து நாமக்கல் ரெயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் கார்த்திக் சென்னிமலை கூறியதாவது:-

நாமக்கல் ரெயில் நிலையத்தில் மழை காலங்களில் தண்டவாளத்திற்கு கீழே உள்ள நடைபாதையில் தண்ணீர் தேங்கியதால் பயணிகள் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபாதை மேம்பாலம் அமைத்தல், லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ரூ.6 கோடியில் நிறைவேற்ற முன்வந்து இருப்பது வரவேற்க கூடியது.

இந்த திட்டத்தின் கீழ் ரெயில் நிலையத்தில் கேண்டீன் வசதி, குடிநீர்வசதி, நவீன கழிப்பறை வசதி, பிளாட்பாரம் முழுவதும் மேற்கூரை அமைத்தல், ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் பூங்கா அமைத்தல், தற்போது உள்ள பார்க்கிங் வசதியை விரிவுப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதேபோல் நுழைவு வாயில் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தால், நாமக்கல் ரெயில் நிலையம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லும் என நம்புகிறேன்.

அதே நேரத்தில் நாமக்கல் வழியாக இயங்கும் சென்னை - போடிநாயக்கனுர் வாராந்திர ரெயில், ஹூப்ளி - தஞ்சாவூர் சிறப்பு ரெயில் ஆகிய ரெயில்கள் நாமக்கல்லில் நிற்காமல் செல்கின்றன. இந்த ரெயில்கள் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கூடுதல் பஸ்கள்

நாமக்கல் ரெயில் பயணிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வினித்:-

சேலத்தில் இருந்து நாமக்கல் வரும் பயணி ஒருவர் ரெயிலில் ரூ.35 கொடுத்து டிக்கெட் எடுத்தால் போதும். ஆனால் நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து போதிய பஸ்வசதி இல்லாததால், அவர் பஸ்நிலையத்திற்கோ அல்லது தனது இருப்பிடத்திற்கோ செல்ல ரூ.100 முதல் ரூ.150 வரை செலவிட வேண்டி இருக்கிறது. எனவே நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து நாமக்கல் பஸ்நிலையம், கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் இயக்க வேண்டும்.

மேலும் நாமக்கல் ரெயில் நிலையம் வழியாக சேந்தமங்கலம், ராசிபுரம், கொல்லிமலை, பேளுக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்சில் "வழி: நாமக்கல் ரெயில் நிலையம்" என்று எழுத வேண்டும். இதன் மூலம் மக்கள் குறைவான செலவில், எளிதில் ரெயில் நிலையத்தை அடைய முடியும். இதேபோல் நாமக்கல் பஸ்நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு ஷேர்ஆட்டோக்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கொசவம்பட்டி ஏரி

நாமக்கல் ரெயில் நிலையத்தையொட்டி சுமார் 36 ஏக்கரில் கொசவம்பட்டி ஏரி அமைந்து உள்ளது. தற்போது இந்த ஏரி புதர்மண்டி காணப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியது. ஆனால் அந்த பணி இன்னும் முழுமை அடையவில்லை.

ஏரியை தூர்வாரி தூய்மைபடுத்துவதுடன், ஏரியை சுற்றிலும் நடைபாதையுடன் பூங்கா அமைத்து, இரவில் ஒளிரும் வகையில் மின்விளக்குகளை பொருத்தி ஏரியை, பொழுதுபோக்கு தளமாக மாற்றினால் மட்டுமே ரெயில் நிலையம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தற்போது நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் வரும் நேரமான இரவு 9.30 மணி மற்றும் சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கு ரெயில் வரும் நேரமான அதிகாலை 3 மணி ஆகிய இரு வேளையில் மட்டுமே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்