ஊட்டி மலைரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
குன்னூர் அருகே மலைரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.;
குன்னூர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து, இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
இதற்காக ஆங்கிலேயர் காலத்தில் மலைகளை குடைந்து பாதை அமைக்கப்பட்டது. மேலும் ஆறுகள் குறுக்கிடும் இடங்களில் பாலம் கட்டப்பட்டது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை 16 குகைகள் மற்றும் 250 பாலங்கள் உள்ளன. இதன் வழியாக சுற்றுலா பயணிகள் அழகிய பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தற்போது மலைரெயில் பாதையில் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.