முகத்தின் பொலிவை மீட்டெடுக்கும் 'ஒயின்'
சிவப்பு ஒயின், சருமத்தின் சோர்வை போக்கி இழந்த பொலிவை மீட்டுத்தருவதோடு, அதை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. சருமத்தில் படிந்திருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.;
காற்றில் கலந்திருக்கும் மாசு, வெயிலின் தாக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சருமம் பொலிவிழக்கக்கூடும். இதனை நீக்கி சருமத்தின் இயற்கையான பளபளப்பை மீட்பதற்கு பேசியல் உதவும். பலவகையான பேசியல் இருந்தாலும், தற்போது பெண்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது 'ஒயின் பேசியல்'.
திராட்சை பழத்தின் சாற்றை புளிக்க வைத்து, பதப்படுத்தி தயாரிக்கப்படும் பானம் தான் ஒயின். இதற்கு பெரும்பாலும் கருப்பு திராட்சையையே பயன்படுத்துகிறார்கள். ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் சருமத்தில் இருக்கும் எலாஸ்டிக் பைபர்களை சீர்படுத்தி சுருக்கங்களைக் குறைக்கும். இதனால், இளமையான தோற்றத்தை தக்க வைக்க முடியும்.
குறிப்பாக சிவப்பு ஒயின், சருமத்தின் சோர்வை போக்கி இழந்த பொலிவை மீட்டுத்தருவதோடு, அதை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. சருமத்தில் படிந்திருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. சிவப்பு ஒயினில் இருக்கும் மெலடோனின் உடலின் தூக்க சுழற்சியை சீராக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களை நீக்குகிறது.
ஒயினில் உள்ள 'ரெஸ்வெராட்ரோல்' எனும் மூலக்கூறு சருமத்துக்குள் எளிதில் ஊடுருவி, சரும செல்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் 'பிளேவனாய்டுகள்' புற்றுநோய் எதிர்ப்பு தன்மையை சருமத்துக்கு அளிக்கிறது. ஒயினில் நிறைந்திருக்கும் 'டானின்' சருமத்தின் அமில-கார சமநிலையை சீராக பராமரிக்க உதவுகிறது.
அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்களில் ஒயின் பேசியல், ஒயின் சிகிச்சை போன்றவை அளிக்கப்படுகின்றன. இதுதவிர வீட்டிலேயே ஒயின் பேசியல் செய்துகொள்ள முடியும். அதைப் பற்றிய தகவல்கள் இங்கே…
ஒயின் பேசியல் செய்முறை:
1. சிறிய கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு ஒயினுடன், சமஅளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகம் முழுவதும் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
2. ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன், 2 டீஸ்பூன் சிவப்பு ஒயின் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீர் பூசி முகத்தை நன்றாக ஈரப்படுத்தவும். பின்பு இந்தக் கலவையை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.
3. சற்று சூடான தண்ணீரில் சுத்தமான டவலை நனைத்து, முகத்தின் மேல் மூடி 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். இதனால் சருமத்தில் இருக்கும் துளைகள் திறக்கும்.
4. சிறிய கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு ஒயின், ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்த டவலைக் கொண்டு முகத்தை துடைத்து சுத்தப்படுத்தவும்.
5. சிறிய கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு ஒயின், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதை முகம் முழுவதும் பிரஷ் கொண்டு சீராகத் தடவவும். 10 முதல் 15 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவவும்.
6. ஒரு டேபிள் ஸ்பூன் ரோஜா பன்னீருடன், ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு ஒயின் சேர்த்து கலக்கவும். இதை முகம் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.