விதவிதமான ஹேர் டிரையர்கள்

ஹேர் டிரையர்கள் வாங்கும்போது, குறைந்த வெப்பம் கொண்ட காற்றை வெளியிடுபவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. குளிர்ந்த காற்றை வெளியிடும் ஹேர் டிரையர்கள், தலைமுடிக்கு பாதிப்பை உண்டாக்காது. இவற்றை பயன்படுத்தும்போது தலைமுடி வறட்சி அடையாது.

Update: 2023-01-29 01:30 GMT

'ஹேர் டிரையர்' மின்சார சக்தி மூலம் இயங்கக் கூடியது. இது இன்றைய காலத்தில் தலைமுடி பராமரிப்புக்காக பலரும் வைத்திருக்கக்கூடிய முக்கியமான கருவியாகும். பெண்களின் கூந்தல் பராமரிப்பு முறையை எளிமையாக்கிய தொழில்நுட்பங்களில் ஹேர் டிரையரும் ஒன்று.

தினமும் தலைக்குக் குளித்து, சரியாகக் கூந்தலை உலர வைக்காததால் உண்டாகும் சைனஸ், ஜலதோஷம், காய்ச்சல் போன்ற உடல்நலக் கோளாறுகளைத் தவிர்ப்பதற்கு ஹேர் டிரையர் உதவும். அதேசமயம், இதைப் பாதுகாப்பாக உபயோகிப்பதும் முக்கியம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தலைமுடி சேதம் அடையக்கூடும்.

ஹேர் டிரையர், அதன் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் அடிப்படையில் பல வகைப்படும். டுவர்மலின், செராமிக், இன்பிரா-ரெட், வாட்டேஜ், பிரஷ்-லெஸ் மோட்டார், அயானிக் போன்றவை அவற்றில் சில வகைகளாகும். சிறந்த சில ஹேர் டிரையர்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

டுவர்மலின்:

ரத்தினக் கல்லை சிறு சிறு துகள்களாகப் பொடி செய்து, அதைக்கொண்டு இந்த ஹேர் டிரையரின் காயில் (Coil) உருவாக்கப்பட்டிருக்கும். இந்தக் காயில் வெப்பமடைவது, குளிர்ச்சியடைவது அல்லது அழுத்தத்துக்கு உட்படுத்தப்படுவது போன்ற காரணங்களால் நெகட்டிவ் அயான்கள் மற்றும் பார் இன்பிரா-ரெட் அலைகளை வெளிப்படுத்தும். இவை இரண்டும் தலைமுடியைப் பாதுகாப்பாக உலர வைத்து, சிக்கு உண்டாவதைத் தடுக்கும்.

செராமிக்:

டுவர்மலின் ஹேர் டிரையரைப் போலவே, இதன் காயிலும் செராமிக் துகள்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. செராமிக் பொருட்களுக்கு இயல்பாகவே விரைவில் வெப்பமடையும் தன்மை மற்றும் சீராக வெப்பத்தைப் பரப்பும் தன்மை உண்டு. எனவே இந்த ஹேர் டிரையர் உபயோகிக்கும்போது, விரைவாக கூந்தல் உலரும். தலைமுடி சேதமடைவது குறைவாக இருக்கும்.

அயானிக்:

பாசிடிவ் அயான்கள், தலைமுடிக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பது அறிவியல் உண்மை. தலைமுடி ஈரமாக இருக்கும்போது அதில் இருக்கும் தண்ணீர் துளிகளில் பாசிடிவ் அயான்கள் அதிகமாக இருக்கும். இந்த அயானிக் ஹேர் டிரையரை பயன்படுத்தும்போது அதில் உருவாகும் நெகட்டிவ் அயான்கள், தலைமுடியில் இருக்கும் பாசிட்டிவ் அயான்களைச் சமன் செய்யும். இதன் மூலம் அதிக வெப்பத்திற்கு உட்படாமல் விரைவாகத் தலைமுடி உலரும்.

ஹேர் டிரையர்கள் வாங்கும்போது, குறைந்த வெப்பம் கொண்ட காற்றை வெளியிடுபவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. குளிர்ந்த காற்றை வெளியிடும் ஹேர் டிரையர்கள், தலைமுடிக்கு பாதிப்பை உண்டாக்காது. இவற்றை பயன்படுத்தும்போது தலைமுடி வறட்சி அடையாது.

தலைமுடியின் தன்மையைப் பொறுத்தும் ஹேர் டிரையரைத் தேர்வு செய்வது அவசியம். அடர்ந்த கூந்தல் உள்ளவர்களுக்கு அதிக வாட்டேஜ் கொண்ட ஹேர் டிரையர் மற்றும் டுவர்மலின் ஹேர் டிரையர் ஏற்றதாக இருக்கும். மெலிதான கூந்தல் உள்ளவர்களுக்கு செராமிக் ஹேர் டிரையர்களும், சுருண்ட தலைமுடி கொண்டவர்களுக்கு 'டிப்யூசர்' அம்சம் கொண்ட அயானிக் ஹேர் டிரையர்களும் சிறந்த தேர்வாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்