முக அழகை மேம்படுத்தும் துளசி 'பேஸ்பேக்'
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக் கொண்டு முகத்தைக் கழுவவும். தினமும் இது போல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் குறைந்து இளமை அதிகரிக்கும்.;
'துளசி' உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, முக அழகையும் மேம்படுத்த உதவுகிறது. முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், அதிகப்படியான எண்ணெய்ப்பசை, முகப்பரு போன்ற சரும பிரச்சினைகளை போக்கி முகப்பொலிவை அதிகரிக்கிறது. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
முகப்பரு:
துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சருமப் பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பசை போல அரைக்கவும். அதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், அவற்றால் உண்டாகும் தழும்புகள் நீங்கும்.
எண்ணெய்ப்பசை:
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை பசை போல அரைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு கலக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2 முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.
முகச்சுருக்கம்:
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக் கொண்டு முகத்தைக் கழுவவும். தினமும் இது போல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் குறைந்து இளமை அதிகரிக்கும்.
முகப்பொலிவு:
சிறிதளவு துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அது நன்றாகக் கொதித்த பின்பு ஆறவைக்கவும். அந்த தண்ணீருடன் சிறிதளவு சந்தனம் சேர்த்து பேஸ்பேக் தயாரிக்கவும். அதை முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பின்பு தண்ணீரில் கழுவவும். அவ்வப்போது இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.
கருமை:
சிறிதளவு துளசி இலைகளை நன்றாக அரைத்து, அதனுடன் 1 முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் கலந்து முகத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்த பின்பு ஈரமான துணியால் மென்மையாக துடைத்து எடுக்கவும். பிறகு சிறு துண்டு பஞ்சை ரோஸ்வாட்டரில் தோய்த்து அதைக் கொண்டு முகத்தை துடைக்கவும். இது போல் வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.
வறட்சி:
2 சிட்டிகை துளசி பொடியுடன், 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.
சரும புத்துணர்ச்சி:
சிறிதளவு துளசி மற்றும் புதினாவுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பசை போல அரைக்கவும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி நன்றாக உலர்ந்த பிறகு கழுவவும். இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.