புத்துணர்வு தரும் எளிய கருவிகள்
முகத்தில் உள்ள துவாரங்களைத் திறந்து அழுக்குகளை வெளியேற்ற ஸ்டீமர் பயன்படுகிறது. இந்த சிகிச்சை இல்லாமல், பேஷியல் முழுமையடையாது. ஸ்டீமரைப் பயன்படுத்தும் போது, முகத்தில் நாம் பூசும் மருந்துப்பொருட்கள் நன்றாக சருமத்துக்குள் ஊடுருவும். ஸ்டீமரை உபயோகித்து முடித்தபின்பு, லேசான ஸ்கிரப் மூலம் இறந்த செல்களை நீக்க வேண்டும்.;
பெண்களின் அழகைப் பராமரிப்பதற்கும், சரும செல்கள் மற்றும் உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதற்கும் அழகு நிலையங்களில் சில கருவிகளைப் பயன்படுத்துவார்கள். தற்போது அவை, வீட்டிலேயே நாம் எளிய முறையில் உபயோகிக்கும் வகையில் கிடைக்கின்றன. இவற்றைக்கொண்டு எந்த நேரத்திலும் அழகு சிகிச்சைகளை செய்து கொள்ள முடியும். அத்தகைய கருவிகளின் தொகுப்பு இதோ...
ஈரப்பதமூட்டிகள்:
ஈரப்பதமூட்டிகள், காற்றின் வறண்ட தன்மையை நீக்க உதவும். வறட்சியால் உண்டாகும் தோல் எரிச்சலைத் தடுக்கும். இறுக்கமான மனநிலையை லேசாக்கும். இதில் இருந்து வெளியாகும் புகை, காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்கும். இதன் மூலம் சருமத்தின் வறட்சி குறைவதால், அதில் படிந்துள்ள இறந்த செல்களை எளிதாக நீக்க முடியும்.
எல்.இ.டி. பேஸ் மாஸ்க்:
பெரும்பாலான தோல் பிரச்சினைகளுக்கு 'ஒளி சிகிச்சை' பயனுள்ளதாக இருக்கும். எல்.இ.டி. பேஸ் மாஸ்க் அணியும்போது, சருமத்திற்குள் ஒளி ஆற்றல் ஊடுருவும். இது சரும செல்களை சீர் செய்து, மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், கறைகள் போன்ற சிதைவுகளை நீக்கி பொலிவு உண்டாக்கும். இந்தக் கருவி எளிதாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், முகத்தின் அமைப்புக்கு ஏற்ற வகையில் அணிந்து கொள்ள முடியும். இதை 15 முதல் 20 நிமிடங்கள் அணிந்திருக்க வேண்டும்.
இதில் உள்ள ஒவ்வொரு வண்ண ஒளியும், முகத்தின் ஒவ்வொரு பகுதியில் கவனம் செலுத்தும். சிவப்பு ஒளி 'கொலாஜன்' உற்பத்தியை மேம்படுத்தும். வீக்கத்தைக் குறைத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நீல ஒளி முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கவும், நிறமியைக் குறைக்கவும் உதவும்.
பேஷியல் ஸ்டீமர்:
முகத்தில் உள்ள துவாரங்களைத் திறந்து அழுக்குகளை வெளியேற்ற ஸ்டீமர் பயன்படுகிறது. இந்த சிகிச்சை இல்லாமல், பேஷியல் முழுமையடையாது. ஸ்டீமரைப் பயன்படுத்தும் போது, முகத்தில் நாம் பூசும் மருந்துப்பொருட்கள் நன்றாக சருமத்துக்குள் ஊடுருவும். ஸ்டீமரை உபயோகித்து முடித்தபின்பு, லேசான ஸ்கிரப் மூலம் இறந்த செல்களை நீக்க வேண்டும்.
பின்னர் மீண்டும் ஸ்டீமரை பயன்படுத்தி நீராவியை முகத்தில் காட்டி, நன்றாக துடைத்து, சீரம் மற்றும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இதன் மூலம் சருமம் புத்துணர்வு பெற்று பொலிவு அடையும்.
புரோர் எக்ஸ்ரேக்டர்:
இந்தக் கருவியைப் பயன்படுத்தும்போது வலுவான அதிர்வுகள் உண்டாகும். இதனால், சருமத் துளைகளில் உள்ள கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் அனைத்தையும் அகற்ற முடியும்.
பேஷியல் ஸ்கல்ப்டிங் பார்:
பேஷியல் செய்து முடித்ததும் முகத்திற்கு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது தளர்வான தசைகளை இறுகச் செய்து, முகத்துக்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். பேஷியல் ஸ்கல்ப்டிங் பார் பயன்படுத்தி முகத்தில் இருக்கும் அனைத்து தசைகளையும் மசாஜ் செய்யலாம். இதன் மூலம் சீரான சருமத்தை பெற முடியும். முகத்தில் சீரம் தடவிய பின்பு இந்தக் கருவியைக் கொண்டு மசாஜ் செய்யலாம். அதன் பின்னர் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதற்காக மாய்ஸ்சுரைசரைத் தடவலாம்.