மார்பக புற்றுநோயை கண்டறியும் சுய பரிசோதனை
பெண்கள் தங்கள் மார்பகங்களை மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்வதன் மூலம், ஏதேனும் மாறுதல்கள் அல்லது புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் எளிதில் கண்டறியலாம்.;
மார்பக புற்றுநோய் பெண்களிடையே அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். 80 சதவீத மார்பகக் கட்டிகள், புற்றுநோயாக இருப்பதில்லை என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியதாகும்.
பெண்கள் தங்கள் மார்பகங்களை மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்வதன் மூலம், ஏதேனும் மாறுதல்கள் அல்லது புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் எளிதில் கண்டறியலாம். இது தொடர்பான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் விரைவில் குணப்படுத்த முடியும் என்கிறார் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் தமிழ்செல்வி.
சுய பரிசோதனை செய்யும் முறை:
* கண்ணாடி முன் நின்று கொண்டு மார்பகங்களை கவனிக்கவும். கைகளைத் தலைக்கு மேல் தூக்கிய நிலையிலோ அல்லது இடுப்பின் பக்கவாட்டில் வைத்துக்கொண்டோ மார்பகங்களை சற்று முன்னிறுத்தி உற்று நோக்கவும். மார்பகங்களில் தடிப்பு, வீக்கம், மரு, நிற மாறுபாடு மற்றும் மார்பக காம்புகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.
* கைவிரல்களைத் தட்டையாக வைத்துக் கொண்டு, நின்றபடியோ அல்லது உட்கார்ந்தபடியோ மார்பகத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மேலும் கீழுமாக அழுத்திப் பார்க்கவும். வட்டவடிவத்தில் மார்பகத்தை சுற்றியும், மார்பக காம்புகளையும், அக்குள் பகுதி தொடங்கி அழுத்தியும், தடவியும் பார்க்கவும். இதன் மூலம் கட்டிகள், வீக்கங்கள் மற்றும் மார்பகக் காம்பில் ஏதேனும் திரவம் ரத்தம் கலந்த நிலையில் வெளியேறுகிறதா எனவும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
* நின்று கொண்டு செய்த அதே சுய பரிசோதனையை, கீழே நேராக நிமிர்ந்து படுத்தவாறும் செய்து பார்க்கவும். வலது தோளுக்கு கீழே தலையணை வைத்துக்கொண்டு, வலது கையை தலைக்கு கீழே வைத்தபடி, வலது மார்பகத்தை இடது கை கொண்டு பரிசோதிக்கவும். இவ்வாறு இடது மார்பகத்தையும் பரிசோதிக்கவும்.
பரிந்துரைகள்:
* மார்பக சுய பரிசோதனையை மாதவிடாய் காலத்தின் இறுதி நாட்களில் செய்வது சிறந்தது. பெண்கள் 20 வயது முதல் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.
* இந்த சுய பரிசோதனையின் மூலம் மார்பகங்கள் உங்களுக்கு பரிச்சயமாகி விடுவதால், மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால் எளிதில் தெரிந்துகொண்டு, மருத்துவரை அணுகி தீர்வு காண முடியும்.
* 29 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
* 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒருமுறை அல்லது 2 வருடங்களுக்கு ஒரு முறை 'மெமோகிராம் பரிசோதனை' செய்து கொள்வது நல்லது.
* புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் 80 சதவீதம் குணப்படுத்த முடியும். சுய பரிசோதனை செய்வதன் மூலம் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.