புருவங்கள் - கண் இமைகளில் வரும் பொடுகு பிரச்சினைக்கு தீர்வு

பொடுகை நீக்க உபயோகிக்கும் ஷாம்புகளில் ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும் என்பதால், அவற்றை புருவங்கள் மற்றும் கண் இமைகளில் தடவுவதைத் தவிர்க்க வேண்டும். கண்கள் மற்றும் கண் இமைகளில் ஏற்படும் பொடுகு பிரச்சினைக்கு எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் தீர்வுகாண முடியும்.

Update: 2023-05-21 01:30 GMT

ண்-பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை பொடுகு. தலைப்பகுதியின் சருமத்தில் இருந்து செதில் செதிலாக உதிரும் இறந்த செல்களையே பொடுகு என்கிறோம். இது தவிர கண்கள் மற்றும் கண் இமைகளிலும் பொடுகு பிரச்சினை வரக்கூடும். இதனை பிளெபாரிடிஸ், செபோரியக் டெர்மடைடிஸ் என்று இரண்டு வகையாக பிரிக்கின்றனர்.

கண் இமைகளின் விளிம்புகளில் ஏற்படும் ஒருவகை அழற்சியே 'பிளெபாரிடிஸ்' எனப்படுகிறது. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று, கண்கள் வறட்சி அடைவது, மீபோமியன் சுரப்பி செயலிழப்பு ஆகியவற்றால் ஏற்படலாம். கண்களில் உண்டாகும் எரிச்சல், அரிப்பு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

செபோரியக் டெர்மடைடிஸ் என்பது ஒருவகையான ஈஸ்ட் தொற்றாகும். புருவங்கள் மற்றும் கண் இமைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் தோல் செதில் செதிலாக உதிர்வது, இமைகளில் அரிப்பு, எரிச்சல், திட்டுகள் ஏற்படுவது ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

கண் மற்றும் கண்ணை சுற்றியுள்ள சருமப் பகுதி மிகவும் மென்மையானது. எனவே இவற்றில் ரசாயனங்கள் கலந்த பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பொடுகை நீக்க உபயோகிக்கும் ஷாம்புகளில் ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும் என்பதால், அவற்றை புருவங்கள் மற்றும் கண் இமைகளில் தடவுவதைத் தவிர்க்க வேண்டும். கண்கள் மற்றும் கண் இமைகளில் ஏற்படும் பொடுகு பிரச்சினைக்கு எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் தீர்வுகாண முடியும். அதுபற்றிய தகவல்கள் இங்கே...

கண் இமைகள் மற்றும் புருவங்களை நன்றாக சுத்தப்படுத்துவதற்கு, குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி ஷாம்புவை உபயோகிக்கலாம். இவை அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பசையை நீக்கும். பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளைக் குறைக்கும். பேபி ஷாம்புவை சிறிதளவு தண்ணீர் கலந்து பயன்படுத்தினால் கண்களில் எரிச்சல் ஏற்படாமல் தடுக்கலாம்.

கண்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை அகற்றி, சருமத்தை சுத்தப்படுத்துவதற்கு பாதாம் எண்ணெய் சிறந்தது. இது கண் இமை முடிகளின் வேர்கால்களுக்கு ஈரப்பதத்தையும், ஊட்டச்சத்தையும் அளிக்கிறது. புதிய புருவ முடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

டீ டிரீ எண்ணெய்யில் பூஞ்சைத் தொற்றை எதிர்க்கும் தன்மை உள்ளது. இதை புருவங்கள் மற்றும் கண் இமைகளில் தினமும் தடவி வந்தால் பொடுகு பிரச்சினை தீரும்.

சுத்தமான பருத்தித் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து புருவங்கள் மற்றும் கண் இமைகளின் மேல் வையுங்கள். சிறிது நேரம் கழித்து அதன் சூடு ஆறியதும் மீண்டும் தண்ணீரில் நனைத்து வையுங்கள். இவ்வாறு தினமும் 15 நிமிடங்கள் செய்யலாம். புருவங்கள் மற்றும் கண் இமைகளில் ஏற்படும் பொடுகு பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாகும்.

ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை சில நொடிகள் சூடுபடுத்தவும். வெதுவெதுப்பாக இருக்கும் அந்த எண்ணெய்யை புருவங்கள் மற்றும் கண் இமைகளின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். சுத்தமான பருத்தித் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து, புருவங்கள் மற்றும் கண் இமைகளின் மேல் 15 நிமிடங்களுக்கு வைக்கவும். பின்பு மிதமான சூடு கொண்ட தண்ணீரால் கண்களைக் கழுவவும்.

Tags:    

மேலும் செய்திகள்