முகப்பொலிவை அதிகரிக்கும் 'ஹைட்ரா பேஷியல்'
ஹைட்ரா பேஷியல் சிகிச்சை முறை தளர்வடைந்த சருமத்தை உறுதியாகவும், இறுக்கமாகவும் மாற்றும். முகப்பரு வருவதற்கு காரணமான அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை சருமத்தின் துளைகள் வழியாக சென்று சுத்தம் செய்யும்.;
முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கி, திசுக்களுக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, சருமத்தை இளமையாக மாற்றக்கூடிய அழகு சிகிச்சை முறையே பேஷியல். இதில் பல வகைகள் இருந்தாலும், தற்போது டிரெண்டிங்கில் இருப்பது 'ஹைட்ரா பேஷியல்'. சருமத்தின் நிறம், தோற்றத்தை மேம்படுத்த இந்த பேஷியல் உதவும்.
'ஹைட்ரா பேஷியல்' என்பது அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவியின் மூலம் செய்யப்படும் அழகு சிகிச்சையாகும். இதில் எல்.இ.டி. ஒளி பயன்படுத்தப்படுகிறது. இது முகத்தில் தேங்கி இருக்கும் அழுக்குகளை ஆழமாக சுத்தம் செய்து மெருகூட்ட உதவுகிறது. இந்த சிகிச்சையை ஒருமுறை செய்யும்போதே முகப்பொலிவு அதிகரிக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
ஹைட்ரா பேஷியல் முறையில் சருமத்தை சுத்தப்படுத்துதல், முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றுதல், வறண்ட சருமத்துக்கு நீரேற்றம் அளித்தல், அழகை மேம்படுத்தும் சீரத்தை (திரவ மருந்து) சருமத்துக்குள் செலுத்துதல் என ஒரு அமர்வில் முகத்திற்கு 4 வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சிகிச்சை முறையில் 3 படிகள் உள்ளன. முதல் படியில், 2 வகையான நிற ஒளிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், நீல நிற ஒளி முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க உதவுகிறது. சிவப்பு நிற ஒளி சருமத்தில் உள்ள சுருக்கங்களை சீரமைக்கிறது.
இரண்டாவது படியில், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் வலி இல்லாமல் உறிஞ்சப்பட்டு நீக்கப்படுகின்றன. இதில் சருமத்தை மென்மையாக்கும் வகையில், மாய்ஸ்சுரைசர்கள் மூலம் ஊட்டம் அளிக்கப்படுகிறது. இது பிரத்யேகமான கருவியைக் கொண்டு சுழற்சி முறையில் செய்யப்படும். இதற்கு ஆன்டி-ஆக்சிடன்டுகள், சீரம் (திரவ மருந்து) ஆக்ஸிஜனேற்றிகள், பெப்டைடுகள், ஹைலூரோனிக் அமிலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
மூன்றாவது படியில் சருமத்தை பளபளக்கச் செய்யும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின்னர் சருமத்தின் நிறம், தன்மை, பொலிவு ஆகியவை மேம்படும். ஒருமுறை இந்த பேஷியல் செய்தபின்பு, சில வாரங்கள் வரை சருமப் பொலிவு நீடித்திருக்கும். இதற்கு ஏற்ற வகையில், வீட்டில் தரமான முக கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.
ஹைட்ரா பேஷியலின் நன்மைகள்:
முகப்பருக்கள், பருக்களால் முகத்தில் உண்டாகும் கருமை நிற வடுக்கள் ஆகியவற்றை நீக்கும்.
இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும். சருமத்தின் நிறத்தையும், தோலின் கட்டமைப்பையும் மேம்படுத்தும்.
ஹைட்ரா பேஷியல் சிகிச்சை முறை தளர்வடைந்த சருமத்தை உறுதியாகவும், இறுக்கமாகவும் மாற்றும். முகப்பரு வருவதற்கு காரணமான அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை சருமத்தின் துளைகள் வழியாக சென்று சுத்தம் செய்யும். பெரிய துளைகள் இறுக்கப்படுவதால், அவற்றின் வழியாக மீண்டும் அழுக்கு மற்றும் எண்ணெய் சேராமல் தடுத்து, சருமத்தின் பொலிவை அதிகரிக்கும்.
இந்த சிகிச்சை முறையில் சருமத்தில் செலுத்தப்படும் கிளைகோலிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் மற்றும் முக்கிய தாவர சாறுகளின் கலவைகள் ஆழமாக ஊடுருவி முக அழகை அதிகரிக்கும்.