மூட்டு வலி போக்கும் மூலிகை தைலம்

எளிதாகக் கிடைக்கும் சில மூலிகைகளைக்கொண்டு, ‘மூட்டுவலி தைலம்’ தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.;

Update: 2022-07-31 01:30 GMT

முதியவர்கள் மட்டுமே மூட்டு வலியால் சிரமப்படுவார்கள் என்ற நிலை மாறி, தற்போது இளம் வயதினரும் அவதிப்படுகின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன், உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களாலும் மூட்டு வலி உண்டாகலாம்.

மூட்டுவலியின் ஆரம்ப நிலையில், மூலிகைகள் கலந்த எண்ணெய்யைக் காய்ச்சி, தடவி வருவதன் மூலம் நிவாரணம் பெற முடியும். அந்த வகையில் எளிதாகக் கிடைக்கும் சில மூலிகைகளைக்கொண்டு, 'மூட்டுவலி தைலம்' தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் வகைகள்:

கடுகு எண்ணெய் - 50 மி.லி.

விளக்கெண்ணெய் - 50 மி.லி.

நல்லெண்ணெய் - 50 மி.லி.

வேப்ப எண்ணெய் - 50 மி.லி.

மூலிகைகள்:

குப்பைமேனி இலை - ¼ கப்

உத்தாமணி இலை - ¼ கப்

நொச்சி இலை - ¼ கப்

முடக்கத்தான் கீரை - ¼ கப்

பிரண்டைத் துண்டுகள் - ¼ கப்

யூகலிப்டஸ் இலைகள் - ¼ கப்

பச்சைக்கற்பூரம் - ¼ டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:

பிரண்டையை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அவற்றை வாணலியில் போட்டு, மிதமான தீயில் லேசாக வதக்கிக்கொள்ளவும். அனைத்து இலைகளையும் காம்புகள் நீக்கி தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்தவும். பின்பு இலைகளையும், பிரண்டையையும் தனித்தனியாக மிக்சியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் இரும்பு வாணலியை வைத்து, அதில் அனைத்து எண்ணெய்களையும் ஊற்றி கலந்து கொள்ளவும். பின்னர் மிதமான தீயில் சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும் அதில் மூலிகைச் சாறுகளை ஊற்றி கலக்கவும். மிதமான தீயில் எண்ணெய் கலவையைக் கிளறிக்கொண்டே இருக்கவும். சாற்றில் இருக்கும் நீர் வற்றியதும் வாணலியை இறக்கி வைத்து, அதில் பச்சைக்கற்பூரம் சேர்த்து கலக்கவும். மூலிகை தைலத்தின் சூடு ஆறியதும் கண்ணாடி குப்பியில் ஊற்றி வைக்கவும்.

பயன்படுத்தும் முறை:

இந்த எண்ணெய் கை, கால் மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல பலன் தரும். இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு எண்ணெய்யை மூட்டுகளில் மென்மையாகத் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

காலை நேரத்தில் மூட்டுகளில் நன்றாகத் தேய்த்து சூரிய ஒளியில் 20 நிமிடங்கள் உட்கார வேண்டும். இதனால் சருமத்துளைகள் வழியாக எண்ணெய் உடலுக்குள் ஊடுருவி, வலியின் தீவிரத்தை படிப்படியாகக் குறைக்கும். பக்கவிளைவு இல்லாத இந்த எண்ணெய்யைக் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். 

Tags:    

மேலும் செய்திகள்