மனதை லேசாக்கும் 'மகிழ்ச்சி ஹார்மோன்கள்'

ஆக்சிடோசின், எண்டோர்பின், டோபமைன் மற்றும் செரோடோனின் எனும் நான்கு ஹார்மோன்கள் தான் மகிழ்ச்சி உணர்வு ஏற்படுவதற்கு காரணமானவை.

Update: 2022-08-14 01:30 GMT

உடலின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட ரசாயன திரவங்களே 'ஹார்மோன்கள்'. இவை உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. ரத்த ஓட்டத்தின் மூலம் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.

ஒவ்வொரு வகையான ஹார்மோன்களும், உடலில் ஒவ்வொரு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் செயலை செய்கின்றன. அவற்றில் மகிழ்ச்சி உணர்வை ஏற்

படுத்தும் ஹார்மோன்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் மகிழ்ச்சியைத் தேடி ஓடுகிறோம். அதை அடிப்படையாக வைத்தே செயல்படுகிறோம். அத்தகைய உணர்வை நமக்குள் ஏற்படுத்துபவை 'மகிழ்ச்சி ஹார்மோன்கள்'.

ஆக்சிடோசின், எண்டோர்பின், டோபமைன் மற்றும் செரோடோனின் எனும் நான்கு ஹார்மோன்கள் தான் மகிழ்ச்சி உணர்வு ஏற்படுவதற்கு காரணமானவை.

ஆக்சிடோசின்:

இது 'காதல் ஹார்மோன்' என்று அழைக்கப்படுகிறது. நம்பிக்கை, பாலியல் உணர்வை தூண்டுதல் மற்றும் உறவுகளை வளர்ப்பதில் பங்காற்றுகிறது. தாய்ப்பால் சுரப்பதற்கும், குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையேயான இணைப்பை உருவாக்குவதற்கும் இந்த ஹார்மோன் அவசியம்.

எண்டோர்பின்:

உடல், மனஅழுத்தத்திற்கு உட்பட்டு அசவுகரியத்தை உணரும்போது இந்த ஹார்மோன் 'இயற்கை வலி நிவாரணி'யாக செயல்படுகிறது. உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற செயல்களில் ஈடுபடும் போது 'எண்டோர்பின்' சுரக்கிறது.

செரோடோனின்:

இந்த ஹார்மோன் கற்றல், நினைவாற்றல், தூக்கம், உடல் வெப்பநிலை, பசி மற்றும் பாலியல் நடத்தை போன்றவற்றுக்கு அவசியமானது. சாப்பிடும்போது பசியைக் கட்டுப்படுத்தி, வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது.

டோபமைன்:

இது 'நல்லுணர்வு' ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது. வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடல் இயக்கம், நினைவாற்றல் மற்றும் சுய ஊக்கத்தை அதிகப்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாடு மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுகிறது.

மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரப்பை அதிகரிக்கும் வழிகள்:

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்பின் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். தனியாக உடற்பயிற்சி செய்வதை விட, குழுவாக சேர்ந்து பயிற்சியில் ஈடுபடும்போது அதிக பலன்கள் கிடைக்கும். எனவே உங்கள் தோழிகள் அல்லது குடும்பத்தினரோடு உடற்பயிற்சி செய்யுங்கள்.

உணவுகள்:

டார்க் சாக்லெட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கடல் உணவுகள், முட்டை, பால் மற்றும் பால் பொருட்கள், பருப்புகள் மற்றும் விதைகள் ஆகியவற்றை சாப்பிடும்போது மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடலுறவு:

மகிழ்ச்சியான உடலுறவின்போது ஆக்சிடோசின், எண்டோர்பின், டோபமைன் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன.

தியானம்:

தியானம் செய்யும்போது எண்டோர்பின், டோபமைன், செரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன. எனவே தினமும் தியானம் செய்வதற்காக சில நிமிடங்கள் ஒதுக்குங்கள்.

சிரிப்பு:

சிரிப்பு மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரப்பை அதிகரிக்கிறது. பிடித்த நகைச்சுவை காட்சிகள் பார்ப்பது, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவுகளோடு சிரித்து மகிழ்வதால் மனம் அமைதியடைவது மட்டுமில்லாமல், இளமை அதிகரிக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்