சருமத்தைப் பாதுகாக்கும் திராட்சை விதை எண்ணெய்
திராட்சை விதை எண்ணெய் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையையும், மென்மையையும் அதிகரிக்கிறது. சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் செயல்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சருமத்துக்குத் தேவையான ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது.;
விதையுடன் கூடிய திராட்சைப் பழங்களைப் பதப்படுத்தி 'ஒயின்' தயாரிக்கும்போது, அதனோடு கிடைக்கும் இணை தயாரிப்பே 'திராட்சை விதை எண்ணெய்' எனப்படுகிறது. திராட்சை பழங்களைப் பிழிந்து ஒயின் தயாரித்தபிறகு, அவற்றின் விதைகள் அப்படியே தங்கிவிடுகின்றன. இவ்வாறு எஞ்சியிருக்கும் விதைகளில் இருந்து 'திராட்சை விதை எண்ணெய்' தயாரிக்கப்படுகிறது. இது இயற்கையான அழகுப் பொருட்கள் தயாரிப்பில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
திராட்சை விதை எண்ணெய்யில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ ஆகியவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-ஆக்சிடன்டு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சருமத்தை நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும். திராட்சை விதை எண்ணெய்யின் பயன்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
♦ திராட்சை விதை எண்ணெய்யில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் முகப்பருக்களை நீக்குகிறது. சருமத் துளைகளில் ஆழமாக ஊடுருவி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கிறது.
♦ திராட்சை விதை எண்ணெய் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையையும், மென்மையையும் அதிகரிக்கிறது. சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் செயல்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சருமத்துக்குத் தேவையான ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது.
♦ உங்களுக்குப் பிடித்த மாய்ஸ்சுரைசிங் கிரீம் மற்றும் பாடி கிரீம்களில் ஒரு துளி திராட்சை விதை எண்ணெய்யை கலந்து உபயோகித்தால் சருமம் நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
♦ சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே நிற மாறுதல் இருக்கும். திராட்சை விதை எண்ணெய்யில் உள்ள 'புரோந்தோசயனிடின்' என்ற ஆக்சிஜனேற்ற மூலப்பொருள் சருமத்தின் நிறத்தைச் சமன் செய்யும். இதனால் சருமம் முழுவதும் சீரான நிறம் உண்டாகும்.
♦ திராட்சை விதை எண்ணெய்யில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள், சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
♦ சருமத்தில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும் ஆற்றல் திராட்சை விதையில் உள்ள 'லினோலிக்' அமிலத்தில் உள்ளது.
♦ திராட்சை விதை எண்ணெய்யில் ஆக்சிஜனேற்றிகள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை போக்கி சருமப் பொலிவை அதிகரிக்கின்றன.
பயன்படுத்தும் முறை:
♦ திராட்சை விதை எண்ணெய்யை சிறிது எடுத்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.
♦ கற்றாழை ஜெல், ஷியா பட்டர், தேங்காய் எண்ணெய் அல்லது ரோஜா பன்னீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன், திராட்சை விதை எண்ணெய்யைக் கலந்து சருமத்துக்கு பயன்படுத்தலாம்.
♦ சூடான தண்ணீரில் நனைத்துப் பிழிந்த பருத்தி துணியைக் கொண்டு முகம் முழுவதும் நன்றாக துடைக்கவும். பின்னர் சிறிது அளவு திராட்சை விதை எண்ணெய்யை முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முகப்பருக்கள் நீங்கும்.