முகப்பொலிவை அதிகரிக்கும் 'பேசியல் ஸ்டீமிங்'

ஸ்டீமிங் செய்ததன் மூலம் திறக்கப்பட்ட சருமத் துளைகளை மறுபடியும் மூடச் செய்வது முக்கியம். இதற்கு டோனர் உதவும். அது கைவசம் இல்லாவிடில் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யலாம்.;

Update:2023-08-13 07:00 IST

வெளியில் செல்லும்போது காற்று மற்றும் சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் மாசுக்கள், சருமத் துளைகளை அடைத்துக்கொள்ளும். இதனால் சருமத்தில் சுரக்கும் 'சீபம்' எனும் எண்ணெய்ப் பொருள் வெளியேற முடியாமல் உள்ளேயே தங்கிவிடும். அதில் பாக்டீரியா போன்ற கிருமிகள் பெருகி, சருமத்தின் பொலிவைக் குறைக்கும்.

இவ்வாறு சருமத்துளைகளில் படியும் அழுக்கு மற்றும் மாசுக்களை அகற்றி, சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுவதுதான் 'ஸ்டீமிங் தெரபி'. சூடான நீரில் உருவாகும் நீராவியை சருமத்தின் மேல் படச்செய்வதன் மூலம் சருமத் துளைகள் விரிவடையும். இதனால் அதில் படிந்திருக்கும் மாசுக்களை எளிதாக வெளியேற்ற முடியும். இதைப் பற்றி மேலும் பல தகவல்களை தெரிந்துகொள்வோம்.

ஸ்டீமிங் செய்முறை:

ஸ்டீமிங் செய்முறையில் மூன்று விதம் உள்ளது. அதில் உங்களுக்கு ஏற்ற முறையை நீங்கள் பின்பற்றலாம். அவை இங்கே…

1. முதலில் ஒரு ரப்பர் பேண்டு கொண்டு தலைமுடியை நன்றாகக் கட்டுங்கள். முகத்தை மென்மையான சோப்பு கொண்டு கழுவுங்கள். ஒரு அகலமான கிண்ணத்தில் 5 முதல் 6 கப் வரை கொதிக்கும் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீரில் இருந்து உருவாகும் நீராவி உங்கள் முகத்தில் படும்படி உட்காருங்கள். இப்போது நீளமான டர்க்கி டவலைக் கொண்டு நீராவி வெளியே செல்லாதவாறு உங்களையும், கிண்ணத்தையும் சேர்த்து போர்த்திக்கொள்ளுங்கள். இவ்வாறு 5 முதல் 10 நிமிடங்கள் வரை முகம் முழுவதும் நீராவி படுமாறு செய்யுங்கள்.

2. முதலில் ஒரு ரப்பர் பேண்டு கொண்டு தலைமுடியை நன்றாகக் கட்டுங்கள். முகத்தை மென்மையான சோப்பு கொண்டு கழுவுங்கள். சிறிய டர்க்கி டவலை சூடான தண்ணீரில் தோய்த்து நன்றாகப் பிழிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு வசதியான முறையில் படுத்துக்கொண்டு, அந்த டவலை முகத்தின் மீது முழுவதும் படும்படியாக மூடிக்கொள்ளுங்கள். 5 நிமிடங்கள் வரை இவ்வாறு செய்யுங்கள்.

3. 'பேசியல் ஸ்டீமர்' என்ற கருவியின் மூலமாகவும் ஸ்டீமிங் செய்ய முடியும். இது மின்சாரத்தின் மூலம் இயங்கக்கூடியது. இந்தக் கருவியில் போதுமான தண்ணீரை நிரப்பி மின் இணைப்பில் பொருத்த வேண்டும். கருவியை ஆன் செய்தவுடன், அதன் உள்ளே நிரப்பப்பட்டுள்ள தண்ணீர் கொதிக்கத் தொடங்கி நீராவி உருவாகும். அதை முகத்தில் படும்படி செய்ய வேண்டும். உங்கள் சருமம் தாங்கக்கூடிய அளவுக்கு, இதில் நீராவி வரும் வேகத்தை கட்டுப்படுத்த முடியும்.

பயன்கள்:

சருமத்தை மென்மையாக்கி சருமத்துளைகளை சுத்தப்படுத்தும். முகப்பருக்கள் உண்டாவதைத் தடுக்கும். சருமத் தசைகளை வலுப்படுத்தி, இளமைத் தோற்றத்தை நீடிக்கச் செய்யும். சருமத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, கொலாஜென் உற்பத்தியைத் தூண்டும். சருமத்துக்கான பராமரிப்பு பொருட்களை சருமம் நன்றாக உறிஞ்சுவதற்கு உதவும்.

குறிப்பு:

ஸ்டீமிங் செய்த பின்பு 20 நிமிடங்களுக்கு ஏதேனும் ஒரு பேஸ் மாஸ்க் போட வேண்டும்.

ஸ்டீமிங் செய்ததன் மூலம் திறக்கப்பட்ட சருமத் துளைகளை மறுபடியும் மூடச் செய்வது முக்கியம். இதற்கு டோனர் உதவும். அது கைவசம் இல்லாவிடில் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யலாம்.

ஸ்டீமிங் செய்த பின்பு கடைசியாக முகத்துக்கு மாய்ஸ்சுரைசர் பூச வேண்டும். இது சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு உதவும்.

Tags:    

மேலும் செய்திகள்