பெண்களை அதிகம் பாதிக்கும் நீர்க்கட்டி அழற்சி
இடைநிலை நீர்க்கட்டி அழற்சி பிரச்சினை ஏற்பட்டால் சிறுநீர்ப்பையின் திறன் குறையும், சிறுநீர்ப்பையின் சுவர்கள் பலவீனமடையும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை உண்டாகும், உடலுறவின்போது அதிக வலி ஏற்படும், தூக்கம் பாதிக்கப்படும், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படும்.;
சிறுநீர்ப்பையின் தசைகளில் ஏற்படும் நாள்பட்ட அழற்சியால், சிறுநீர்ப்பையில் அழுத்தம், வலி, இடுப்பு வலி ஆகியவை அதிகரிக்கும். இதை 'இடைநிலை நீர்க்கட்டி அழற்சி' என்று அழைக்கிறார்கள். சிறுநீர்ப்பை மற்றும் இடுப்பில் உண்டாகும் இந்த வலி, தொடக்கத்தில் சிறு அசவுகரிய உணர்வாக ஆரம்பித்து பின்பு கடுமையான வலியாக மாறும். இதுதான் வலிமிகுந்த சிறுநீர்ப்பை நோயின் முதன்மையான அறிகுறியாகும்.
இடைநிலை நீர்க்கட்டி அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறுநீர்ப்பையின் சுவர்களில் எரிச்சல் மற்றும் வீக்கம் உண்டாகும். இதனால் சிறுநீர்ப்பை முழுவதுமாக நிரம்புவதற்கு முன்பாகவே, 'சிறுநீர் கழிக்க வேண்டும்' என்ற உணர்வு ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உண்டாகும்.
சிறுநீர்ப்பையில் ஏற்படும் இந்த இடைநிலை நீர்க்கட்டி அழற்சியானது, ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக, 30 வயதைக் கடந்த பெண்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக இருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காரணங்கள்:
மரபணு மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுகள், சிறுநீர் பாதையில் அடிக்கடி ஏற்படும் பாக்டீரியா தொற்று, இடுப்புப் பகுதியில் ஏற்படும் உள் உறுப்புகளின் செயலிழப்பு, சிறுநீரகத்தில் ஏற்படும் ஒவ்வாமை, நாள்பட்ட வயிற்று கோளாறுகள் மற்றும் அடிக்கடி மேற்கொள்ளப்படும் உடலுறவினாலும் இடைநிலை நீர்க்கட்டி அழற்சி ஏற்படலாம்.
இடைநிலை நீர்க்கட்டி அழற்சி பிரச்சினை ஏற்பட்டால் சிறுநீர்ப்பையின் திறன் குறையும், சிறுநீர்ப்பையின் சுவர்கள் பலவீனமடையும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை உண்டாகும், உடலுறவின்போது அதிக வலி ஏற்படும், தூக்கம் பாதிக்கப்படும், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படும்.
அறிகுறிகள்:
அதிகப்படியாக சிறுநீர் கழித்தல், சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை மற்றும் இடுப்புப் பகுதியில் வலி ஏற்படுதல் போன்றவை முதன்மை அறிகுறிகளாகும்.
பிரச்சினை அதிகரிக்கும் நிலையில், மாதவிடாய் நாட்களின்போதும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கும்போதும், உடற்பயிற்சி செய்யும் போதும், மன அழுத்தத்தில் இருக்கும்போதும், உடலுறவில் ஈடுபடும்போதும் சிறுநீர்ப்பாதை அல்லது ஆசனவாய் இடைவெளியில் வலி உண்டாகக்கூடும். இந்த அறிகுறிகள் ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப மாறுபடலாம்.
தடுக்கும் வழிகள்:
கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள், காபின் கலந்த உணவுகள், சிட்ரஸ் அமிலம் சேர்க்கப்பட்ட உணவுகள், செயற்கை இனிப்பு மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தை பலப்படுத்தும் பயிற்சிகளை செய்யலாம். இத்தகைய பயிற்சிகள் செய்யும்போது மெதுவாகவும், ஆழமாகவும் சுவாசிக்க வேண்டும்.
வலி உண்டாகும்போது கவனத்தை திசை திருப்புதல் போன்ற தளர்வு நுட்பங்களை கையாளலாம்.
வயிற்றில் அழுத்தம் ஏற்படுத்தும் வகையிலான பெல்ட் மற்றும் ஆடைகளைத் தவிர்த்து தளர்வான உடைகளை அணிவது நல்லது.
சிகிச்சை:
நோய் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து வாழ்வியல் மற்றும் உணவுமுறையில் மாற்றம், அக்குபஞ்சர், உடற்பயிற்சி, மருந்துகள், அறுவை சிகிச்சை என இடைநிலை நீர்க்கட்டி அழற்சிக்கான சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளலாம்.