அழகை அதிகரிக்கும் 'பீட்ரூட்'
பீட்ரூட் சாறுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால் சரும வறட்சி குறையும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தால், கருமை மறைந்து விரைவில் உதடு சிவப்பாகும்.;
சருமப் பொலிவையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் பொருட்களில் ஒன்று பீட்ரூட். இதில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை சிறப்பாக பராமரிக்க உதவுகின்றன. கரும்புள்ளிகள், முகப்பரு, கருவளையம் போன்ற சருமப் பிரச்சினைகளை பீட்ரூட்டைக் கொண்டு எளிதில் குணப்படுத்த முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...
இரண்டு பங்கு பீட்ரூட் சாறுடன், ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சம்பழச்சாறு கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், முகம் பளபளப்பாக இருக்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன், சிறிது சர்க்கரை கலந்து முகத்தில் பூசி மென்மையாக ஸ்கிரப் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கும்.
பீட்ரூட் சாறுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால் சரும வறட்சி குறையும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தால், கருமை மறைந்து விரைவில் உதடு சிவப்பாகும்.
கடலை மாவு, பீட்ரூட் சாறு, தயிர் இவை மூன்றும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து, சிறிதளவு ரோஜா இதழ் சேர்த்து அரைத்து முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கும். சருமம் மென்மையாகும்.
முல்தானி மெட்டி பொடியுடன், சிறிதளவு பீட்ரூட் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றித் தடவினால் கருவளையம் மறையும்.
பீட்ரூட், கேரட், ஆப்பிள் மூன்றையும் சேர்த்து அரைத்து சிறிது கடலை மாவு கலந்து முகத்தில் பேஸ்பேக் போடவும். இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
பீட்ரூட் சாறுடன் அரிசி மாவு 2 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் நீங்கும். பீட்ரூட் துருவலுடன், வாழைப்பழம் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசினால் சரும வறட்சி நீங்கி பொலிவாகும்.
அரைத்த பீட்ரூட் விழுதுடன், ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவி ஸ்கிரப் செய்து வந்தால் சருமத்தில் உண்டான கருமை நீங்கும்.