கொழுப்பைக் கரைக்கும் பார்லி

காய்ச்சலும், சளியும் பரவி வரும் இந்த சூழ்நிலையில், வாரம் மூன்று முறை பார்லியை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதில் உள்ள ‘வைட்டமின் சி’ நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

Update: 2023-04-23 01:30 GMT

லகம் முழுவதும் அதிகமாக பயிரிடப்படும் தாவரங்களில் ஒன்றான பார்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 'வாற்கோதுமை' என்று அழைக்கப்படும் பார்லி, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

இதில் 3.3 கிராம் புரதமும், 19.7 சதவீதம் கால்சியமும், 0.4 சதவீதம் கொழுப்புச் சத்தும் உள்ளது. இதுதவிர நார்ச்சத்து, மாலிப்டினம், மாங்கனீசு, செலினியம், தாமிரம், வைட்டமின் பி, குரோமியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், நியாசின், ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆன்டி நியூட்ரியன்கள் போன்ற சத்துக்களும் பார்லியில் நிறைந்துள்ளன.

பார்லியை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டி சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும்.

  • காய்ச்சலும், சளியும் பரவி வரும் இந்த சூழ்நிலையில், வாரம் மூன்று முறை பார்லியை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதில் உள்ள 'வைட்டமின் சி' நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
  • பார்லியில் உள்ள 'பீட்டா குளூக்கான்' என்ற கரையும் நார்ச்சத்து, 'புரோபயோடிக்' என்ற அமிலம் மற்றும் 'நியாசின்' போன்ற சத்துக்கள் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டவை. பார்லி, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். இதனால் இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் உணவில் தாராளமாக பார்லியை சேர்த்துக் கொள்ளலாம்.
  • பார்லியை பயன்படுத்தி கஞ்சி அல்லது சூப் தயாரித்து சாப்பிட்டுவந்தால், உடல் பலவீனம் நீங்கும். உடல் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி குணமாகும்.
  • பார்லி செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை நீக்கும். உடலில் பித்த அமிலங்களின் சமநிலையைப் பராமரித்து, பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கும்.
  • உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் பார்லியை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் காப்பர் சத்துகள் எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலுவூட்டும்.
  • கர்ப்பிணிகள் பார்லி தண்ணீரை குறைந்த அளவில் அவ்வப்போது சாப்பிட்டுவந்தால், கால்கள் மற்றும் பாதங்களில் ஏற்படும் வீக்கம் குறையும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயால் உண்டாகும் தலை சுற்றல் நீங்கும். கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் பார்லியை அதிக அளவில் சாப்பிடக் கூடாது.
  • பார்லியில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து ஆகிய சத்துக்கள் ரத்த சோகையை போக்கும்.
  • சரும பராமரிப்புக்கும் பார்லியை பயன்படுத்தலாம். இது வறட்சியை நீக்கி சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும். இளமையான தோற்றம் தரும்.
Tags:    

மேலும் செய்திகள்