ஷேப்வேர் அணிபவர்கள் கவனத்துக்கு...
நீண்டநேரம் ஷேப்வேர் அணியும்போது, குடல் சுருங்கத் தொடங்கும். இதனால் குடல் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்படும். ஷேப்வேர் அணியும் இடங்களில் அழுத்தம் காரணமாக சருமம் சிவந்து தழும்புகள் ஏற்படும். இது பலருக்கு அரிப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
கடந்த சில வருடங்களாக பெண்களுக்கான ஆடைகளில் ஷேப்வேர் முக்கிய இடம் வகிக்கிறது. பலவிதமான வடிவங்கள், வகைகள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கும் ஷேப்வேர், பெண்களின் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டக்கூடியது.
ஆடம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான உடைகள், கல்லூரி மற்றும் அலுவலகத்துக்கு தினசரி அணிந்து செல்லும் உடைகள் என எதுவாக இருந்தாலும் ஷேப்வேர் ஒட்டுமொத்த தோற்றத்தையும் அழகாக்கும் தன்மை உடையது. இதை அணிவதால் பெண்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதேசமயம், ஷேப்வேரை நீண்ட நேரம் அணியும்போது பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும். அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
நுரையீரல் செயல்பாடு:
நாம் ஒவ்வொரு முறையும் மூச்சை உள்ளிழுத்து வெளியிடும்போது, நுரையீரல் நன்றாக சுருங்கி விரிய வேண்டும். ஷேப்வேர் அணியும்போது, மூச்சுக்காற்றை உள்ளிழுப்பதில் சிரமம் ஏற்படும். குறிப்பாக நுரையீரலின் கீழ்ப் பகுதி விரிவடைவதை ஷேப்வேர் முழுமையாக தடுக்கும். இதை நீண்ட நேரம் அணியும்போது 30 முதல் 60 சதவீதம் வரை மூச்சை உள்ளிழுக்கும் விகிதம் குறைய நேரிடும். இதனால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை பெறுவதில் சிரமம் ஏற்படும். உடற்பயிற்சி செய்யும்போது ஷேப்வேர் அணிந்தால், உடலுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவு குறையும். இதனால் மூச்சுத்திணறல், சோர்வு, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
ரத்த ஓட்டம்:
உடல் நன்றாக இயங்க, ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். உடலின் எந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்பட்டாலும், முக்கிய உறுப்புகள் எளிதில் பாதிப்படையும்.ஷேப்வேர் உடல் தசைகளை இறுக்கிப் பிடிப்பதால் இதை அணியும் பகுதிகளில் ரத்த ஓட்டம் தடைபடக்கூடும்.
செரிமான பிரச்சினை:
பெரும்பாலும் தொப்பையை குறைத்துக்காட்டவே பெண்கள் ஷேப்வேரை பயன்படுத்துகின்றனர். இது வயிற்றுப் பகுதியைச் சுற்றி இறுக்கமாகப் பிடிப்பதால், வயிற்றில் இருந்து உருவாகும் அமிலம் உணவுக் குழாய்க்கு சென்று நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் செரிமானக் கோளாறுகள் உண்டாகும்.
குடல் இயக்கம்:
நீண்டநேரம் ஷேப்வேர் அணியும்போது, குடல் சுருங்கத் தொடங்கும். இதனால் குடல் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்படும். ஷேப்வேர் அணியும் இடங்களில் அழுத்தம் காரணமாக சருமம் சிவந்து தழும்புகள் ஏற்படும். இது பலருக்கு அரிப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
சிறுநீரக பாதிப்பு:
ஷேப்வேர் அணியும்போது பல சமயங்களில், பெண்கள் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும். சிறுநீர் பாதையில் நோய்த் தொற்று உண்டாகும். இதனால் உடலின் முக்கிய தசைகள் வலுவிழப்பது, கால்கள் மரத்துப் போவது போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
எத்தனை மணி நேரம் ஷேப்வேர் அணியலாம்?
கச்சிதமான உடல்வாகு பெற வேண்டும் என்பதற்காக பல பெண்கள் குறைந்தபட்சம் 8 மணி நேரம் வரை ஷேப்வேர் அணிகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ஷேப்வேரை அகற்றிவிட்டு, உடலுக்கு மென்மையாக மசாஜ் செய்வது நல்லது. பின்பு, அரை மணி நேரம் இடைவெளிவிட்டு மீண்டும் அணியலாம். தூங்கும் சமயங்களிலும், உடற்பயிற்சி செய்யும்போதும் ஷேப்வேர் அணிவதை தவிர்க்க வேண்டும்.