கால்சியம் குறைபாட்டைத் தடுக்கும் அதலைக்காய்

அதலைக்காயில் உள்ள ‘லெய்ச்சின்’ என்ற வேதிப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, புற்றுநோய் உண்டாக்கும் கிருமிகளையும் அழிக்கக்கூடியது.

Update: 2022-12-25 01:30 GMT

சிறிய பாகற்காய் போன்ற தோற்றம் கொண்ட அதலைக்காய், கரிசல் மண் நிறைந்த பகுதிகளில் அதிகம் வளரக்கூடியது. தரிசு நிலங்களிலும், வயல் ஓரங்களிலும் தானாக வளரக்கூடிய இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

கசப்பு தன்மை கொண்ட அதலைக்காய், கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்தது. பெண்களுக்கு வரும் கால்சியம் குறைபாட்டை நீக்கும் திறன் கொண்டது. அதலைக்காயைப் பறித்த அன்றே சமைத்து சாப்பிடுவது சிறந்தது. இளம் பெண்கள் இதை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் அதலைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதலைக்காயை பருப்புடன் கலந்து வேகவைத்து எண்ணெய் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே குணம் பெறலாம். அதலைக்காய் கல்லீரலை வலுவாக்கும்.

அதலைக்காயில் உள்ள 'லெய்ச்சின்' என்ற வேதிப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, புற்றுநோய் உண்டாக்கும் கிருமிகளையும் அழிக்கக்கூடியது. இதில் இருக்கும் நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்தும். உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து எடையைக் குறைக்க உதவும்.

Tags:    

மேலும் செய்திகள்