இளம்பெண்களையும் தாக்கும் மூட்டுவலி

இயல்புக்கு மீறிய எந்த வலியையும் உதாசீனப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும்.

Update: 2022-10-09 01:30 GMT

யதானவர்களை அதிகமாகத் தாக்கும் மூட்டுவலி பிரச்சினை, தற்போது இளம்பெண்களிடமும் பரவலாக இருக்கிறது. உடல் பருமன், உடற்பயிற்சி செய்யாதது, ஹார்மோன் மாற்றங்கள், சர்க்கரை நோய், காசநோய், மரபுவழி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்றவை மூட்டுவலி பாதிப்புகளை உண்டாக்கும்.

உடலில் கால் மூட்டு, தோள்பட்டை, கைமூட்டு, மணிக்கட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய முக்கிய மூட்டு பகுதிகள் உள்ளன. எலும்புகள் இணையும் இடங்களான இப்பகுதிகளில் ஏற்படும் அசவுகரியமான உணர்வு, சோர்வு, வலி, வீக்கம் போன்ற உணர்ச்சிகள் மூட்டுவலி பிரச்சினைகளின் அறிகுறியாகும்.

இயல்புக்கு மீறிய எந்த வலியையும் உதாசீனப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு மூட்டுவலி பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டே உலக 'ஆர்த்ரைடிஸ் தினம்' ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆர்த்ரைடிஸ் என்பது 'ஆர்த்ரோ' எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதற்கு 'மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி' என்பது பொருள்.

தற்போது இளம்பெண்கள் பலரும் மூட்டுவலியால் அவதிக்குள்ளாகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் காரணமாக 'ஈஸ்ட்ரோஜன்' எனும் ஹார்மோனின் சுரப்பு ஒவ்வொரு மாதமும் குறையும். இது மூட்டுகளின் நெகிழ்வு தன்மைக்கு காரணமான 'கார்டிலேஜ்' உருவாக்கத்தைக் குறைக்கும். இதனால் இளம்பெண்களுக்கு மூட்டுவலி ஏற்படுகிறது.

மெனோபாஸ் காலத்தை தாண்டிய பெண்களும் மூட்டுவலியால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். உடல் பருமனால் பெண்களே அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். இவர்களையும் எளிதில் மூட்டுவலி பிரச்சினை தாக்குகிறது.

மூட்டுவலிக்கான வாழ்வியல் காரணங்களை அறிந்து, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் வலியைக் குறைக்கலாம். காசநோய், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பக்கவிளைவின் காரணமாக மூட்டுவலி இருந்தால், சிகிச்சை பெற்று அந்நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

உடல் பருமனாக இருக்கும் பெண்கள் எடையைக் குறைக்க வேண்டும். நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மூட்டுகளுக்கு வலிமை தரக்கூடிய கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மூட்டுப்பகுதிகளில் மசாஜ் செய்யலாம். இது சரும துவாரங்களின் வழியாக எலும்பு மூட்டுகளை இணைக்கும் கொலாஜென் புரதத்தை அதிகரிப்பதால் மூட்டுவாத நோய்கள் வராமல் தடுக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்