உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுகிறீர்களா?

எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

Update: 2023-09-10 01:30 GMT

ற்போது பெரும்பாலான பெண்களின் கவலையை அதிகரிப்பது அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைதான். இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பை நோய்கள், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய், கீல்வாதம், பக்கவாதம், மன அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாகப் புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.

காலை உணவைத் தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் முரண்பாடு ஏற்படும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும்.மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.

முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் அவசியமானவையாகும். இவை நிறைந்த உணவுகளை தினசரி உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காலை உணவாக முழு தானியங்கள், பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது. இவற்றோடு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால் உடல் எடை எளிதாகக் குறையும்.

Tags:    

மேலும் செய்திகள்