'ரெட்ரோ' படத்திற்காக தாய்லாந்து சென்று தற்காப்பு கலை கற்ற சூர்யா
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படம் மே மாதம் வெளியாக உள்ளது.;

சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதற்கிடையில், 'ரெட்ரோ' திரைப்படத்தின் சண்டை காட்சிகளை வழக்கமாக இல்லாமல் யதார்த்தமாகவும் தனித்துவமாகவும் அமைக்க வேண்டும் என படக்குழு ஸ்டண்ட் இயக்குனரை தேடினர். அப்போது, ஓன்ங் பாக், பாகுபலி 2 போன்ற படங்களின் ஸ்டண்ட் இயக்கனராக பணிபுரிந்த கேச்சா என்பவர் ரெட்ரோ படத்திற்காக அழைக்கப்பட்டார். இவர் விஸ்வரூபம், ஜவான் போன்ற படங்களுக்கும் சர்வதேச தரம் வாய்ந்த சண்டை காட்சிகளை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரெட்ரோ படத்தின் சண்டை காட்சியும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் சூர்யா தாய்லாந்து வரை சென்று அவரிடம் கலைகளை கற்றுக் கொண்டார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.