ரீ-ரிலீஸாகும் விஜய்யின் 'பகவதி' படம்
ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பகவதி' படம் ரீ-ரிலீஸாக உள்ளது.;

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் 'பகவதி'. இந்த படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்கியிருந்தார். இதில் ரீமா சென் கதாநாயகியான நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ஜெய், பொன்னம்பலம், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள விஜய்க்கும் வடிவேலுவுக்கும் இடையிலான காமெடி காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டன. டீக்கடை உரிமையாளராக இருந்து கேங்ஸ்டராக விஜய் பரிணமிக்கும் ஆக்சன் காட்சிகளும் வெறித்தனமாக அமைந்திருக்கும். சுமார் ரூ.4 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி 'பகவதி' படம் வருகிற 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் கோடை காலத்தில் விஜய்யின் 'சச்சின்' படம் ரீ-ரிலீஸ் ஆகிறது என அறிவித்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே பகவதி படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
