தனுஷ்-நயன்தாரா தகராறு குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி
'நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்த ஆர்.ஜே.பாலாஜி தனுஷ்-நயன்தாரா தகராறு குறித்து பேசியுள்ளார்.;
சென்னை,
நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று உருவானது. இது நேற்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு வெளியான இதன் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. இதனால் அந்த வீடியோவுக்கு எதிராக நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதனையடுத்து, தன்மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் நடிகர் தனுஷ் பழிவாங்குகிறார் என்று நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்த ஆர்.ஜே.பாலாஜி தனுஷ்-நயன்தாரா தகராறு குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நானும் அதை இணையத்தில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம் என்பதுபோல ஏதோ ஒன்று நடக்கிறது. அனைவரும் பார்க்கிறோம், அதைப்பற்றி பேசுகிறோம். இதில் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை. தனுஷே அதற்கு பதில் சொல்லவில்லை. நாம் என்ன சொல்ல. அவர்கள் இருவருமே அதை பேசிக்கொள்வார்கள்' என்றார்.