'இளையராஜாவிடம் நான் கற்றுக்கொண்டது இதுதான்...' - ஏ.ஆர்.ரகுமான் பகிர்வு

இளையராஜாவிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்து ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்து கொண்டார்.;

Update:2025-01-09 22:55 IST

சென்னை,

2 ஆஸ்கார் விருதுகளுக்கு சொந்தக்காரரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் மற்றும் ஈரானிய மொழி படங்கள் உள்ளிட்ட சர்வதேச திரைப்படங்களிலும் பணியாற்றி, ஏராளமான விருதுகளை வென்று குவித்துள்ளார். சுமார் 32 ஆண்டுகளை கடந்து இந்திய சினிமா துறையில் தற்போது வரை முன்னணி இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் திகழ்ந்து வருகிறார்.

அவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர், விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்தார். மேலும் பல்வேறு புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுக்கு கீபோர்டு வாசிக்கும் கலைஞராக ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றியுள்ளார். அவ்வாறு, தான் பணியாற்றிய இசையமைப்பாளர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறுகையில், "இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழ் மொழியை எடுத்து அதில் தேன், வெண்ணெய், தங்கம் என அனைத்தையும் குழைத்து பாடகி சுசிலாவிடம் கொடுத்து விடுவார். அவரது பணி மிகவும் அற்புதமாக இருக்கும். அதற்கு நான் மிகப்பெரிய ரசிகன்.

டி.ராஜேந்தரின் இசை அனைத்தும் அவரது இதயத்தில் இருந்து வரும். அவர் இசை கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவரது இதயத்தில் இருந்து வரக்கூடிய இசைக்கு தனி சக்தி இருக்கும்.

நான் வேலை செய்த சமயத்தில் பல இசை கலைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தனர். ஆனால் அப்படிப்பட்ட நேரத்தில், இசையமைப்பாளர் இளையராஜா இந்த கலைக்கே ஒரு மரியாதையை கொண்டு வந்தார். அவரது இசையை பற்றி அனைவருக்கும் தெரியும். அதை நான் சொல்லவே தேவையில்லை. அவருடன் பணியாற்றுவதே ஒரு மரியாதையான விஷயம் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. அந்த மரியாதையை இளையராஜா கொண்டு வந்தார். இசையை தாண்டி அவரிடம் கற்றுக்கொண்டது இதுதான்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்