நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து கற்பனைகளை பரப்பாதீர் - விஷால் மக்கள் நல இயக்கம்
நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து கற்பனைகளை பரப்பாதீர் என்று விஷால் மக்கள் நல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.;
சென்னை,
நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன்பு 'மதகஜராஜா' பட விழாவில் பங்கேற்றபோது மேடையில் கைகள் நடுங்கின. பேசவும் தடுமாறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விஷாலுக்கு என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி உடல்நலம் விசாரித்தனர்.
இதையடுத்து விஷாலுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதற்காக டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விஷால் உடல் நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் நேற்று திடீர் வதந்திகள் பரவியது. உடல்நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தொடங்கினர்.
இந்த நிலையில், நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து கற்பனைகளை பரப்பாதீர் என்று விஷால் மக்கள் நல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து விஷால் மக்கள் நல இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக நடிகரும், தயாரிப்பாளரும் மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக சிந்தனையாளருமான விஷாலின் உடல்நிலை குறித்து பலர் பல்வேறு அவதூறுகளையும் தங்களுக்கு தோன்றிய கதைகளையும், கற்பனைகளையும் ஊடகங்கள் என்ற பெயரால் விளம்பரம் தேடி வரும் ஒரு சில விஷம எண்ணம் கொண்ட நபர்களால் பொய்யான செய்தியை மட்டும் பரப்பி வருகின்றனர்.
தற்போது இதனை எழுதும் நோக்கம் அவர்களுக்கு பதில் கூற வேண்டும் என்ற எண்ணம் இல்லை மாறாக இவ்வளவு பொய்களையும், வதத்திகளும் பறப்பி அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ளாமல் அதே சமயத்தில் எங்கள் தலைவர் விஷால் மீது பாசம் கொண்ட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா தெலுங்கானா மற்றும் கர்நாடகா மக்களுக்கும் அவர் மீது அளவில்லா அன்பு கொண்ட ரசிகர்கள் மக்கள் நல இயக்கத்தின் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்.
நடிகர் விஷாலுக்கு உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பும் "ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள்" நம்பிக்கைமிக்க நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலி தற்குறிகள் தங்களுக்கு கிடைக்கும் சொறிய காசுகளுக்காக அறத்தை மறந்து, தர்மத்தை மறந்து உண்மையை அறியாமல் பொய்யான போலியான கற்பனைகளை அவதூறு பரப்பி வருகின்றனர்கள்.
அவர்களை எப்போதும் மக்கள் நிச்சயம் அடையாளம் கண்டு கோமாளியாக்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு, அவர்களுக்கு எங்களின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க தயாராக இல்லை அதே வேளையில் இன்று எங்கள் தலைவர் விஷாலுக்கு ஏற்பட்ட அவதூறுகள், கற்பனை கதைகளைப் பரப்புவது போல் இனி வரும் காலங்களில் வேறு எவருக்கும் நடைபெறக்கூடாது என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.