ரூ.1000 கோடி வசூலைக் கடந்த 'கல்கி 2898 ஏ.டி'

'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

Update: 2024-07-13 15:04 GMT

சென்னை,

பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி 2, சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்தது. வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்தியாவில் இதுவரை செலவிடப்படாத அளவிற்கு பொருட் செலவு செய்து 'கல்கி 2898 ஏ.டி' படத்தினை தயாரித்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கமல்ஹாசனின் தோற்றமும் பெரிதும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

இந்த நிலையில், உலகளவில் 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் ரூ.1000 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த பதிவு ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், இந்த மைல்கல் உங்கள் அன்பின் கொண்டாட்டமாகும். இந்த படத்தினை நீங்கள் உங்கள் திறந்த இதயத்துடன் ஏற்றுக் கொண்டீர்கள். மேலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு நன்றி என்று பதிவிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து நடிகர் அமிதாப் பச்சனும் இதுகுறித்து பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த முயற்சியில் என்னையும் ஒரு அங்கமாக மாற்றியதற்காக வைஜெயந்தி பிலிம்ஸுக்கு எனது நன்றியும், வாழ்த்துகளும்' என்று எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்