பொங்கல் வெளியீட்டில் இணையும் பாலாவின் 'வணங்கான்'
பாலாவின் ‘வணங்கான்’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.;
சென்னை,
இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.
அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. தொடக்கத்தில் இதில் சூர்யா நடிக்கவிருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இதிலிருந்து விலகிய சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகும் என படக் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. ஆனால் ஒரு சில காரணங்களால் வணங்கான் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இதன் புதிய ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த சில தினங்களாகவே வணங்கான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி இப்படத்தை 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது