'நான் நன்றாக இருக்கிறேன்' - உடல்நலம் குறித்து பதிவிட்ட சங்கீத் பிரதாப்
நடிகர் சங்கீத் பிரதாப், நலமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.;
சென்னை,
மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப் நடிப்பில் உருவாகி வரும் மலையாள படம் 'புரோமான்ஸ்'. இந்தப் படத்தை அர்ஜுன் டி.ஜோஸ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் கொச்சியின் எம்.ஜி.சாலையில் கார் ஓட்டும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது. விபத்தின்போது காரின் முன்பக்கம் நடிகர் அர்ஜுன் அசோகனும், பின்பக்கம் சங்கீத் பிரதாப்பும் இருந்தனர். இதில் அர்ஜுன் அசோகன் மற்றும் சங்கீத் பிரதாப்புக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சங்கீத் பிரதாப், நலமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
'நாங்கள் ஒரு விபத்தை சந்தித்தோம். அதிர்ஷ்டவசமாக அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். சில மணி நேரமாக நான் கண்காணிப்பில் இருந்தேன், விரைவில் மருத்துவமனையிலிருந்து திரும்புவேன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. எனக்கு ஒரு சிறிய காயம் உள்ளது. ஆனால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன்.
அனைத்து அன்புக்கும் அக்கறைகளுக்கும் நன்றி. உங்கள் அழைப்புகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். நான் இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன், முழுமையாக குணமடைய சில நாட்கள் ஓய்வு தேவை. 'புரோமான்ஸ்' படப்பிடிப்பு சில நாட்களில் தொடரும், விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்', இவ்வாறு தெரிவித்துள்ளார்.