திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு
சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் திரி விக்ரம் மீது நடிகை பூனம் கவுர் தனது சமூகவலைதளத்தில் புகார் அளித்திருந்தார்.;
ஐதராபாத்,
ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்து மீறல்களை அம்பலப்படுத்தி உள்ள நிலையில் நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் திரி விக்ரம் மீது பூனம் கவுர் தனது சமூகவலைதளத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், புகார் அளித்து அதிக நாட்கள் ஆகியும் திரைப்பட கலைஞர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நடிகை பூனம் கவுர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'திரிவிக்ரம் மீது திரைப்பட கலைஞர்கள் சங்கத்திடம்(எம் எம் ஏ) நான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது எனது கெரியரை அழித்தது மட்டுமின்றி எனது ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கடுமையாக பாதித்துள்ளது. நடவடிக்கை எடுக்காமல் அவரை ஆதரிப்பதைப் பார்க்கும்போது மனவேதனை அளிக்கிறது' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொருளாளர் சிவ பாலாஜி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'எம் எம் ஏ-விடம் அவர் எந்த புகாரும் கொடுக்கவில்லை. எம் எம் ஏ-க்கு எழுத்துப்பூர்வ புகார் அளிக்காமல் இணையத்தில் பதிவிடுவதால் எந்த பயனும் இல்லை' என்றார்.