தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்: விழாக்கோலம் பூண்ட திருவாரூர் நகரம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.;

Update:2024-03-21 06:52 IST

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3-லும் சிறந்து விளங்குகிறது. திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு மேலும் பெருமை சேர்ப்பது ஆழித்தேர். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் ஆழித்தேரில் செய்யப்பட்டுள்ளது.

தேரின் எடை 220 டன் ஆகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தேர் அலங்கரிக்கப்படுகிறது. இதுதவிர தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கார தட்டுகள் ஆகியவற்றுடன் ஆழித்தேரின் மொத்த எடை 350 டன்னாகும்.

தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன். தேரின் பின்புறம் தள்ள 2 புல்டோசர்கள், 4 வீதிகளில் தேரை திரும்பவும், செலுத்தவும் முட்டுகட்டைகள், இரும்பு தகடுகள் பயன்படுத்தப்படுகிறது. தேரோடும் 4 வீதிகளிலும் தேர் அசைந்து ஆடி திரும்பும் அழகை காண கண்கள் கோடி வேண்டும் என்பார்கள். ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.

இந்நிலையில் இன்று(வியாழக்கிழமை) சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது. இதனுடன் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடிக்கப்படும். முன்னதாக காலை 5.15 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி திருவாரூர் நகராட்சியின் மூலம் பக்தர்கள் வசதிக்காக நகரின் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

தேரோடும் வீதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்களை கொண்டு உடனுக்குடன் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரில் பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் தொற்றுநோய்கள் பரவாத வகையில் கிருமிநாசினி, சுண்ணாம்பு தூள் தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் தேருக்கு பின்னால் தொடர்ந்திட தயார் நிலையில் உள்ளது.

108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனத்தில் டாக்டர், செவிலியர்கள் மற்றும் மருந்துகள் அடங்கிய குழு தயாராக தேரை பின் தொடர்ந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேரை நகர்த்துவதற்கு வசதியாக வேளாண்மை பொறியியல் துறை புல்டோசர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு ஆழித்தேரின் பின் சக்கரத்தின் அருகே தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆஸ்பத்திரியில் பகல், இரவு முழுவதும் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆழித்தேருடன் விநாயகர், சுப்பிரமணியர். கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் அலங்கரிக்கும் பணி நிறைவு நிலையை அடைந்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்த சிவனடியார்கள் திருவாரூர் வருகை புரிந்துள்ளனர். ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. ஆழித்தேரோட்ட விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்