ஏவல், பில்லிசூனியம் விரட்டும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்

கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 2-வது வாரத்தில் குண்டம் திருவிழாவையொட்டி பூச்சாட்டப்படும். அன்று முதல் பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குவார்கள்.;

Update:2024-07-15 17:05 IST

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற அசுரன் ஒருவன், தேவர்களை துன்புறுத்தினான். இதுபற்றி தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவனின் அருளாசியுடன் பார்வதி தேவி, பைரவி அவதாரம் எடுத்து அந்த அசுரனை அழித்ததாகவும், அந்த அம்மனே, இங்கு பாரியூர் கொண்டத்து காளியம்மனாக அருள்புரிவதாகவும் தல வரலாறு சொல்லப்படுகிறது.

தல சிறப்பு

பாரியூர் கொண்டத்து காளியம்மன், கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவேதான் இந்த ஊர் 'பாரியூர்' என பெயர் பெற்றதாம். கோபிசெட்டிப்பாளையம் முன்பு வீரபாண்டி கிராமம் என அழைக்கப்பட்டது. இந்த ஊரைச் சேர்ந்தவர் கோபிசெட்டிப்பிள்ளான். இவரை வள்ளலாக மக்கள் போற்றுகின்றனர். இவரின் பெயரால்தான், கோபிச்செட்டிப்பாளையம் என்ற பெயர் வந்தது.

கோபிசெட்டிப் பிள்ளான், கொண்டத்து காளியம்மனின் பக்தர். ஒருமுறை அவரிடம் புலவர் ஒருவர் வந்து சில பொருட்களை கேட்டார். அப்போது வேண்டிய பொருளை வழங்கும் நிலையில் அவர் இல்லை. இதனால் மனம் வருந்திய கோபிச்செட்டிப்பிள்ளான், தன் உயிரை மாய்த்துக்கொள்ள பாரியூர் பகுதியில் உள்ள புலி வசிக்கும் புதருக்குச் சென்றார். காளியம்மனை தன் மனதில் நினைத்துக்கொண்டு புலியை எதிர்நோக்கி காத்திருந்தார். ஆனால் புலி வரவில்லை. அதற்குப் பதிலாக அம்மன் அருளால், அங்கே ஒரு பொற்குவியல் அவர் கண்ணில்பட்டது. தனது வள்ளல் தன்மை காக்கப்பட வேண்டும் என்று எண்ணி, காளியம்மன்தான் இந்த பொற்குவியலை அளித்திருப்பதாக அவர் நினைத்தார். உடனே அந்த பொற்குவியலை எடுத்துச் சென்று புலவருக்கும், மற்றவர்களுக்கும் வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.

40 அடி நீள குண்டம்

கோவில் வளாகம் நீண்ட சதுர வடிவில் அமைந்து உள்ளது. கோவிலை அடைந்ததும் நம்மை ராஜகோபுரம் வரவேற்கிறது. இந்த கோபுரம் 90 அடி உயரமும், 40 அடி அகலமும் உடையது. ராஜகோபுரத்தின் வழியே உள்ளே சென்றதும் விநாயகரை தரிசிக்கலாம். பின்னர் குதிரை வாகனமும், அதனை யொட்டி பிரமாண்ட வடிவத்தில் முனியப்பசாமியும் காட்சி தருகிறார்கள். முனியப்பனை வழிபடுபவர் பில்லி, சூனியம், பேய், பிசாசு தொல்லைகளில் இருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.

கோவிலின் மையத்தில் அம்மன் கற்கோவில் மண்டபம் உள்ளது. இதன் உள்பகுதியில் கருங்கல்லாலான அழகிய கர்ப்பக்கிரகத்தில் கொண்டத்து காளியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த மண்டபம் 28 தூண்களால் ஆனது. இதில் பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறைக்குள் கொண்டத்துக் காளியம்மன் அமர்ந்த கோலத்தில் வலது காலை குத்திட்டு, இடது காலால் அசுரனை அழுத்தியபடி, வலது கரங்களில் சூலம், உடுக்கை, வாள், கிளி தாங்கியும், இடது கரங்களில் தீச்சட்டி, கேடயம், மணி, கிண்ணம் ஆகியவற்றை தாங்கியும் வடக்கு முகமாகக் காட்சியளிக்கிறாள். காளியாக இருந்தாலும், அன்னை சாந்தரூபியாக காட்சி கொடுக்கிறார்.

அம்மன் மண்டபத்தின் முன்பு 40 அடி நீளத்தில் குண்டமும், அதன் தொடக்கத்தில் திருக்கோடி விளக்கு கம்பமும் (தீப ஸ்தம்பம்) உள்ளது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் 2-வது வாரத்தில் குண்டம் திருவிழாவையொட்டி பூச்சாட்டப்படும். அன்று முதல் பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குவார்கள். முதலில் கோவிலின் தலைமை பூசாரி இருகரம் ஏந்திய நிலையில் குண்டம் இறங்குவார். அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ (தீ) மிதித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வான பூ மிதித்தலுக்கு மறுநாள் தேர்த் திருவிழா நடைபெறும்.

அமைவிடம்

ஈரோட்டில் இருந்து கோபிசெட்டிபாளையம் 35 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து பாரியூர் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. கோபியில் இருந்து பாரியூருக்கு அடிக்கடி டவுன் பஸ் இயக்கப்படுகிறது.

துன்பங்கள் விலகும்

கொண்டத்து காளியம்மனை வணங்குவோருக்கு திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். பில்லிசூனியம், ஏவல், பகை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இந்த அன்னையை வேண்டி வழிபட்டால் துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம்.

மண் திருநீறு

மற்ற கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவை வழங்கப்படும். ஆனால் கொண்டத்து காளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு 'மண் திருநீறு' அளிக்கப்படுகிறது. அம்மன் தேர் வீதி உலா வரும் வழியில் உள்ள மண்ணை எடுத்து சுத்தம் செய்து, அதை திருநீறாக வழங்குகிறார்கள். அம்மன் உலா வந்த பாதையில் அன்னையின் அருள் சக்தி இருக்கும் என்பதால், இப்படி மண்ணையே திருநீறாக வழங்குகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்