12 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்: திருக்கழுக்குன்றம் கோவில் குளத்தில் தோன்றிய சங்கு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு புனித சங்கு தோன்றியது. இந்த சங்கு பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு உள்ளது.;

Update: 2024-03-07 23:43 GMT

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் 1,400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கோவிலாகும்.

இந்த கோவிலில் சங்கு தீர்த்தம் என்ற பெயரில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுவதாக நம்பப்படுகிறது. சங்குகள் பெரும்பாலும் கடலில் உள்ள உப்பு நீரில்தான் தோன்றும். ஆனால் நன்னீரில் உருவாகுவது அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு தோன்றும் சங்கு கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி கோவிலில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் இடம்பெறும்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் மார்கண்டேயர் என்ற முனிவர், திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு வந்தார். அப்போது சாமிக்கு அபிஷேகம் செய்ய குளத்தில் இருந்து நீர் எடுத்துச்செல்ல அவரிடம் தீர்த்த பாத்திரம் இல்லை.

எனவே தீர்த்த பாத்திரம் வேண்டி இறைவனை நினைத்து தவம் செய்தார். அப்போது கோவில் குளத்தில் இருந்து சங்கு ஒன்று தோன்றியதாகவும், அதை வைத்து அவர் அபிஷேகம் செய்ததாகவும் புராண வரலாறு கூறப்படுகிறது. அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் குளத்தில் இருந்து சங்கு தோன்றி வருவதாக நம்பப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு...

கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று இந்த தெப்பக்குளத்தில் புனித சங்கு தோன்றியது. அதன்பின்னர் எப்போது சங்கு தோன்றும் என்று பக்தர்கள் காத்திருந்தனர்.

இதற்கிடையே நேற்று காலை 9.50 மணியளவில் அந்த குளத்தில் மீண்டும் புனித சங்கு தோன்றி கரை ஒதுங்கியது. உடனே கோவில் நிர்வாகிகள் சங்கு தீர்த்த குளத்தில் இருந்து சங்கை எடுத்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வைத்தனர். தகவல் தெரிந்ததும் அங்கு ஏராளமானோர் திரண்டனர்.

இதனையடுத்து அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், செயல் அலுவலர் பிரியா மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சங்கை தரிசனம் செய்தனர்.

நேற்று மாலை சங்கு தீர்த்த குளக்கரையில் வைத்து இருந்த சங்குக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் சங்கு அலங்கரிக்கப்ட்டு சிறிய பல்லக்கில் ஊர்வலமாக மாடவீதியை சுற்றி வந்து தாழக்கோவிலை வந்தடைந்தது.

அதைத்தொடர்ந்து பக்தர்கள் 3 நாட்கள் பார்வையிடுவதற்காக கோவில் வளாகத்தில் சங்கு வைக்கப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரி என்பதால் திராளான பக்தர்கள் சங்கு தரிசனம் செய்ய வருவார்கள் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யக் கோரி கோவில் நிர்வாகத்திடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது குளத்தில் இருந்து வெளியே வந்த சங்கு இடம்புரி சங்கு என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்