அமெரிக்காவின் பிரம்மாண்ட இந்து கோவில்
இந்தியச் சிற்பிகளால் வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாஞ்சராத்திர சாஸ்திரப்படி சுவாமி நாராயண் கோவில் கட்டப்பட்டுள்ளது.;
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்பு சார்பில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்து கோவில்கள் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில், அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலம் ராபின்ஸ்வில்லி நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் அக்ஷர்தாம் ஆலயமும் ஒன்று. இக்கோவில் நியூயார்க் நகரத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்திற்கு தெற்கே 60 மைல் தொலைவிலும், வாஷிங்டன் டி. சி.க்கு வடக்கே சுமார் 180 மைல் தொலைவிலும் உள்ளது.
183 ஏக்கர் பரப்பளவில் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் அமெரிக்காவின் மிகப்பெரிய இந்து ஆலயம் மற்றும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஆலயம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இக்கோவிலின் மூலவர் சுவாமி நாராயண் ஆவார். மேலும் ராதா கிருஷ்ணன், ராமர்-சீதை மற்றும் சிவன்-பார்வதி போன்ற தெய்வங்களுக்கு 12 துணைக் கோவில்கள், கோபுரங்களுடன் உள்ளன. இக்கோவில் கட்டுமானத்தில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்குக் கல் மற்றும் கருங்கல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலய வளாகத்திற்குள் பிரமாண்ட குளம் மற்றும் நீர் நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியச் சிற்பிகளால் வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாஞ்சராத்திர சாஸ்திரப்படி கட்டப்பட்ட இந்த ஆலயம், இந்துக்களின் ஆன்மீக-பண்பாட்டு வளாகமாக உள்ளது. இக்கோவிலில் 10 ஆயிரம் தெய்வச் சிற்பங்கள் மற்றும் இந்திய இசைக்கருவிகள் மற்றும் இந்திய நடன வடிவங்கள் உள்ளன.
செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். வார இறுதி நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் மற்றும் சில குறிப்பிட்ட இந்து பண்டிகை நாட்களில் பார்வையாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யவேண்டியது அவசியம்.
காலை 9 மணி முதல் 10 மணி வரை, 11.15 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை, இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை மூலவரை தரிசனம் செய்யலாம். அமெரிக்காவின் அரசு விடுமுறை நாட்களில் பிற்பகல் 3.30 மணிக்கு தரிசனம் தொடங்கும். காலையில் 11.15 மணிக்கு ராஜபோக ஆரத்தியும், இரவு 7 மணிக்கு சந்தியா ஆரத்தியும் நடைபெறும்.