பெண்களும், நடுத்தர வயது மக்களும் முடிவு செய்வார்கள்
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களித்தவர்களைவிட 8.1 சதவீதம் பேர் கூடுதலாக வரப்போகும் தேர்தலில் வாக்களிக்கப்போகிறார்கள்.;
சென்னை,
18-வது மக்களவை தேர்தல் விரைவில் நடக்கிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என இந்தியா முழுவதும் 543 தொகுதிகள் இருக்கின்றன. 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி 18 வயதானவர்களைக்கொண்ட இறுதிவாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் வாக்காளர் எண்ணிக்கை அதிகம். திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, இந்தியாவில் 96 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஓட்டுப்போட இருக்கிறார்கள்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களித்தவர்களைவிட 8.1 சதவீதம் பேர் கூடுதலாக வரப்போகும் தேர்தலில் வாக்களிக்கப்போகிறார்கள். ஏனெனில் கடந்த தேர்தலில் 89 கோடியே 60 லட்சம் பேர்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். இந்தாண்டு வாக்காளர் பட்டியலில் ஆண்களின் எண்ணிக்கை 49.7 கோடியாகவும், பெண்களின் எண்ணிக்கை 47.1 கோடியாகவும் இருக்கிறது. ஆயிரம் ஆண் வாக்காளர்களுக்கு 948 பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், சத்தீஷ்கார், கேரளா உள்பட 12 மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் 18 முதல் 19 வயதுடைய முதல் வாக்காளர்களாக 1.85 கோடி பேரும், 20 முதல் 29 வயதுடைய வாக்காளர்கள் 19.7 கோடி பேரும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். இதில் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793 பேர் ஆண்கள், 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665 பேர் பெண்கள் ஆவார்கள். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 13 ஆயிரத்து 872 பேர் அதிகமாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 37 தொகுதிகளிலும், 205 சட்டசபை தொகுதிகளிலும் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள்தான் அதிகம். தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிகளில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகம். 18 முதல் 19 வயதுடைய முதல்முறை வாக்காளர்கள் 10 லட்சத்து 92 ஆயிரத்து 420 பேர் இருக்கிறார்கள். 20 முதல் 29 வயதுடையவர்கள் ஒரு கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679 ஆகவும், 30 முதல் 39 வயதுடையவர்கள் 1 கோடியே 29 லட்சத்து 263 ஆகவும், 40 முதல் 49 வயதுடையவர்கள் 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 152 ஆகவும், 50 முதல் 59 வயதுடையவர்கள் 1 கோடியே 10 லட்சத்து 51 ஆயிரத்து 484 ஆகவும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் காணப்படுகிறார்கள்.
ஆக தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பெண்கள், நடுத்தர வயது வாக்காளர்களின் முடிவுதான் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக விளங்குகிறது. வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை. வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை மத்திய அரசாங்கத்தில் ஆட்சி செய்யப்போவது யார்? என்பதை தீர்மானிக்க வாக்களித்தால் மட்டுமே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியவர்கள் ஆவார்கள். தமிழ்நாட்டில் அதிக சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது என்ற பெயரை பெறுவது வாக்காளர்களின் கையில்தான் இருக்கிறது.