பரபரப்பான பணமதிப்பிழப்பு வழக்கு தீர்ப்பு

6 ஆண்டுகள் கடந்தாலும், ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சமுதாயம் இன்னும் சீரடையவில்லை.

Update: 2023-01-26 20:00 GMT

6 ஆண்டுகள் கடந்தாலும், ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சமுதாயம் இன்னும் சீரடையவில்லை. 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி இரவு திடீரென்று ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டவுடன் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பாதிப்பில் இருந்து சமுதாயம் இன்னும் முழுமையாக மீளவில்லை.

மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் 52 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்னா, வி.ராமசுப்பிரமணியம், பி.வி.நாகரத்தினா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிந்து கடந்த டிசம்பர் 7-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் இந்த புத்தாண்டு மலர்ந்த உடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

எல்லோருடைய எதிர்பார்ப்புக்கும் மாறாக 5 நீதிபதிகளில், 4 நீதிபதிகள் 'மத்திய அரசாங்கத்தின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும், இந்த நடவடிக்கை எந்த அரசியலமைப்பு சட்டத்தையும் மீறவில்லை. ரிசர்வ் வங்கி, மத்திய குழுவின் பரிந்துரையைப் பெற்றே, மத்திய அரசாங்கம் இந்த முடிவை எடுத்தது. கருப்பு பணத்தை ஒழித்தல், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதை தடுத்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையிலேயே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டது', என்று தங்களின் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

ஆனால் 2027-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெறப்போகும் நீதிபதி பி.வி.நாகரத்தினா மட்டும் மாறுபட்ட தீர்ப்பாக, 'ரூபாய் நோட்டு செல்லாது என்று எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பானது. அரசின் இந்த அறிவிப்பில் ரிசர்வ் வங்கி அர்த்தமுள்ள அணுகுமுறையை மனதில் கொண்டு செயல்படவில்லை. புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பு கடுமையான நிதி சிக்கலையும், சமூக பொருளாதார சீரழிவையும் ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு கொள்கை என்பது ரிசர்வ் வங்கியின் மத்திய போர்டில் இருந்துதான் வரவேண்டுமே தவிர, மத்திய அரசாங்கத்தில் இருந்து வந்திருக்கக்கூடாது. நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்துக்கு பிறகு சட்டம் இயற்றித்தான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். இதை விட்டு விட்டு வெறும் அறிக்கையின் அடிப்படையில் மட்டும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பது சட்டத்துக்கு முரணானது. எனவே இதை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட சட்டமும் செல்லாது' என்று தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந்த தீர்ப்பு ஒரே ஒரு நீதிபதியால் கூறப்பட்டு இருந்தாலும், அதுதான் மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் தீர்ப்பாக இருக்கிறது. 1946-ம் ஆண்டிலும், 1978-ம் ஆண்டிலும் இதுபோல் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றித்தான் அறிவிக்கப்பட்டதே தவிர, இதுபோல வெறும் அறிவிப்பின் அடிப்படையில் செல்லாது என்று அறிவித்து விடவில்லை. மேலும் இவ்வாறு திடீரென்று ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம், மக்கள் அடைந்த இன்னல்களை தீர்ப்பில் கோடிட்டு காட்டியிருந்தால் மக்கள் மனநிறைவு கொண்டு இருப்பார்கள். இந்த நடவடிக்கையால் எந்த அளவு சமுதாயத்துக்கும், மக்களுக்கும் பயன் கிடைத்தது? என்பதை இந்த தீர்ப்பின் தொடர்ச்சியாக மத்திய அரசாங்கம் வெளியிடவேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்