தீபாவளி தித்திக்குமா?

தீபாவளி என்று மகிழ்ச்சி பொங்க அனைவரும் கொண்டாடப்போகும் தீபாவளி அடுத்த மாதம் 31-ந்தேதி வருகிறது.

Update: 2024-09-26 01:15 GMT

சென்னை ,

'உன்னைக் கண்டு நானாட, என்னைக் கண்டு நீயாட' உல்லாசம் பொங்கும் இந்த தீபாவளி என்று மகிழ்ச்சி பொங்க அனைவரும் கொண்டாடப்போகும் தீபாவளி அடுத்த மாதம் 31-ந்தேதி வருகிறது.தீபாவளி என்றாலே தித்திக்கும் பண்டங்கள்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால் இந்த ஆண்டு அந்த பண்டங்களின் விலை தித்திக்க வைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. பண்டங்கள் செய்ய முக்கியமாக தேவைப்படும் சமையல் எண்ணெயை பொருத்தமட்டில் இந்தியா வெளிநாட்டு இறக்குமதியையே நம்பியிருக்கிறது.

இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் தேவை ஆண்டுக்கு 2 கோடியே 50 லட்சம் டன்னாக இருக்கிறது. இதில் 58 சதவீதத்துக்கு மேல் இந்தோனேசியா, மலேசியா, பிரேசில், அர்ஜெண்டினா, ரஷியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயில் சோயாபீன் மற்றும் சூரியகாந்தி கச்சா எண்ணெய்க்கு இதுவரை 5.5 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி இப்போது 27.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சுத்திக்கரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கான வரியும் 13.75 சதவீதத்தில் இருந்து 35.75 சதவீதமாக அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு விவசாயிகள் பலன் அடைவதற்காகவே, அதாவது இறக்குமதி வரி குறைவாக இருந்தால் அந்த கச்சா எண்ணெய் விலை மத்திய அரசாங்கம் எண்ணெய் வித்துக்களுக்காக வழங்கும் குறைந்தபட்ச ஆதார விலையை விட மிக குறைவாக இருக்கும். எனவே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகவும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வதற்காகவுமே இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள்தான். இந்த வரி உயர்வு மூலம் சமையல் எண்ணெய் விலை 15 சதவீதம் வரை உயரும். ஏன் 20 சதவீதம் வரை கூட உயரும் என்று கூறுகிறார்கள். பண்டிகை காலம் நெருங்குவதால் சமையல் எண்ணெய் நுகர்வு சாதாரணமாகவே அதிகரிக்கும். அதுவே சற்று விலையை உயர்த்தும். ஆனால் இப்போது இறக்குமதி வரி உயர்வு அறிவித்தவுடனேயே அனைத்து நொறுக்கு தீனிகள் மற்றும் இனிப்புகளின் விலையும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.

சாதாரண மக்கள் இரவு சாப்பாட்டின் கூட்டுக்காக வாங்கும் பக்கோடாவின் விலை கூட 100 கிராமுக்கு 30 ரூபாயில் இருந்து ரூ.34 ஆக உடனடியாக உயர்ந்துவிட்டது. இதுபோலத்தான் சமையல் எண்ணெயை வைத்து தயாரிக்கப்படும் அனைத்து இனிப்பு, கார வகை பண்டங்களின் விலை எல்லாம் உயர்ந்துவிட்டது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா பனை எண்ணெய்தான் பிஸ்கட்டுகள், சோப்பு மற்றும் வாசனை பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அவைகள் எல்லாம் இந்த இறக்குமதி வரி உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வால் சோப்பு, பிஸ்கட் போன்ற பொருட்களின் விலையும் உயரப்போகிறது. ஆனால் இப்போது மத்திய அரசாங்கம் எந்த பொருட்களின் அதிகபட்ச விலையையும் உயர்த்தக்கூடாது. ஏனென்றால் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணையால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கையிருப்பு 45 முதல் 50 நாட்களுக்கு இருக்கும் என்று சொன்னாலும் விலை உயர்வை கட்டுப்படுத்தமுடியாது. எனவே இந்த இறக்குமதி வரி உயர்வு விவசாயிகளுக்கு ஆதாயம் என்றாலும் பொதுமக்களுக்கு பாதிப்புதான்.

Tags:    

மேலும் செய்திகள்