கேட்டது கிடைத்தது

முதல்-அமைச்சர் கேட்ட ஒரு கோரிக்கை நிறைவேறிவிட்டது.

Update: 2024-10-07 00:53 GMT

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்படுவதற்கு மூல காரணமாக இருந்தவர் மறைந்த முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி. அவர் 2007-ல் முதல்-அமைச்சராக இருந்தபோது நவம்பர் மாதம் 7-ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது இதன் திட்ட மதிப்பீடு ரூ.14,600 கோடியாகும்.

அந்த நேரத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை செயல்படுத்த கடன் உதவி பெறுவதற்காக ஜப்பான் நாடு சென்று, அங்குள்ள பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் 59 சதவீத நிதியளிக்கும் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசாங்கமும், ஜப்பான் நிறுவனமும் கையெழுத்திட்ட பிறகே தமிழ்நாடு திரும்பினார்.

இதைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி மத்திய அரசாங்கத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவும் மெட்ரோ ரெயில் முதல் கட்ட திட்டத்துக்கு அனுமதிதந்தது. அதன்படி, கோயம்பேடு - அசோக்நகர் இடையே மேல்மட்ட மெட்ரோ ரெயில் பாலம் அமைக்க அடுத்த மாதமே டெண்டர் கோரப்பட்டது. இப்படி பல கட்டங்களை தாண்டி முதல் கட்ட மெட்ரோ ரெயில் போக்குவரத்தை 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கி.மீ. தூரத்துக்கு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தொடங்கிவைத்து, விரிவாக்க திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.

இப்போது முதற்கட்ட திட்டத்தில் 58 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் ஓடுகிறது. இரண்டாவது கட்ட திட்டத்தில் மாதவரம்-சிறுசேரி சிப்காட்; கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி; மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் 118.9 கி.மீ. தூரம் ஓடுவதற்கான பணிகளை தமிழக அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது. ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் 50:50 சதவீத மூலதன பங்களிப்பு அடிப்படையில் ஒப்புதல் அளிக்க மத்திய அரசை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு கோரிவந்தது. ஆனால், மத்திய அரசாங்கமோ, 2017-ல் அ.தி.மு.க. அரசு 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் மாநில அரசு திட்டமாகவே செயல்படுத்தப்படும் என்று சொன்னதை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு ஒப்புதல் தராமல் இருந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 27-ந்தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து 50:50 சதவீத மத்திய-மாநில அரசாங்கங்களின் மூலதன பங்களிப்புடன் மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். இந்த சந்திப்பை தினத்தந்தி 29-ந்தேதி வெளியிட்ட தலையங்கத்தில், "நம்பிக்கையூட்டும் மகிழ்ச்சி சந்திப்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்தநாள் இங்கிலாந்தில் இருக்கும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியது போலவே 50:50 சதவீத மூலதன ஒப்புதல் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இப்போது மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மொத்த திட்ட செலவினமான ரூ.63,246 கோடியில் 65 சதவீத தொகையை மத்திய அரசாங்கம் வழங்க இருப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7,425 கோடியும் அடங்கும். இப்போது, முதல்-அமைச்சர் கேட்ட ஒரு கோரிக்கை நிறைவேறிவிட்டது. மற்ற 2 கோரிக்கைகளும் விரைவில் பிரதமர் நரேந்திரமோடியால் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்