விண்ணைத் தொடும் தங்கம் விலை !

இப்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.56,800 ஆக உயர்ந்துவிட்டது

Update: 2024-09-28 01:18 GMT

சென்னை,

இந்தியாவில் ரிசர்வ் வங்கி போல, அமெரிக்காவின் மத்திய வங்கி பெடரல் வங்கியாகும். எப்படி இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் உயரும்போதும், குறையும் போதும் பல தாக்கங்கள் ஏற்படுகிறதோ? அதுபோல, பெடரல் வங்கியின் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் உலகம் முழுவதிலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். அப்படி ஒரு நிகழ்வு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பெடரல் வங்கியில் சமீபத்தில் வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலுமே பெரிய அளவில் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில், எல்லா பொருளாதாரங்களுமே அமெரிக்க கரன்சியான டாலரை அடிப்படையாக வைத்தே சுழல்வதால், பெடரல் வங்கியின் வட்டி விகிதங்களால் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக தங்கத்தின் விலை உலகம் முழுவதிலும் எகிறிவிட்டது. இது இப்போது மட்டுமல்ல, எப்போதெல்லாம் பெடரல் வங்கியின் வட்டி விகிதம் குறைகிறதோ, அப்போதெல்லாமே தங்கத்தின் விலை உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. 2007-2008-ல் இதுபோல பெடரல் வங்கியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டபோது, சர்வதேச தங்கத்தின் விலை 31 சதவீதம் உயர்ந்துவிட்டது. இந்தியாவிலும் அப்போதுதான் தங்கத்தின் விலை மிக அதிகமாக உயரத்தொடங்கியது.

இதுபோல, மேலும் சில ஆண்டுகளில் பெடரல் வங்கியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதெல்லாம் முதல் தாக்கமாக தங்கத்தின் விலைதான் அதிகரித்துள்ளது. இவ்வாறு தங்கத்தின் விலை உயர்வதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முதல் காரணமாக பெடரல் வங்கியின் வட்டி குறைக்கப்பட்டவுடனேயே அமெரிக்க கருவூலம் நிறைய தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுபோல, உலக மத்திய வங்கியும் தங்கத்தை வாங்கி கையிருப்பில் வைக்க தொடங்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல், இந்தியா உள்பட பல நாடுகளும் தங்கத்தை வாங்கி இருப்பில் வைத்துக் கொண்டிருக்கிறது.

இதுபோல, அமெரிக்காவின் பெடரல் வங்கியில் வட்டி குறைக்கப்படும் ஒவ்வொரு நேரத்திலும் தங்கம் மற்ற சொத்துகளான பங்குகள், பத்திரங்கள், நிலம் ஆகியவற்றைவிட அதிகமாக மின்னும் என்று வரலாறு கூறுகிறது. இப்போதும் பங்குகளில், வங்கிகளில் முதலீடு செய்து இருப்பவர்கள் அந்த முதலீடுகளை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து கொண்டிருப்பதால், தேவை அதிகமாக.. அதிகமாக.. விலை உயரும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், ரஷியா- உக்ரைன் போர் மீண்டும் உக்கிரத்தை அடைந்துள்ளதும் ஒரு காரணமாக இருக்கிறது.

இந்தியாவில் இப்போது தீபாவளி உள்பட பல பண்டிகைகள் அடுத்தடுத்து வரப்போகிறது. மேலும், அடுத்த மாதம் முதல் கல்யாண சீசன். எனவே தேவை அதிகரிப்பதாலும், இப்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.56,800 ஆக உயர்ந்துவிட்டது. பெடரல் வங்கி இந்த ஆண்டு இன்னொரு முறை 0.5 சதவீதம் வட்டியை குறைக்கும், அடுத்த இரு ஆண்டுகளிலும் மேலும் வட்டி குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தங்கத்தின் விலை இதோடு நிற்காது இன்னும் வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொடும் என உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது தங்கத்தின் விலை உயரும் வேகத்தைவிட வரும் காலங்களில் இன்னும் வேகம் எடுக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், என்னதான் விலை உயர்ந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு குறையாது, விற்பனையும் சரியாது.

Tags:    

மேலும் செய்திகள்