இரு நாடுகள்; இரு வீரர்கள் ; இரு அம்மாக்கள் !
நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் எல்லைகள் கடந்த நண்பர்கள் மட்டுமல்லாது, சகோதரர்களைப்போல பழகிவந்தனர்.
சென்னை,
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று பாடினார், கணியன் பூங்குன்றனார். அதன் பொருள், "எல்லா ஊரும் எங்கள் ஊரே; எல்லா மக்களும் எங்கள் உறவினர்களே" என்பதுதான். இன்றளவும் உலக ஒற்றுமையை வலியுறுத்தும் போதெல்லாம் அந்த வரிகள்தான் மேற்கோள் காட்டப்படுகின்றன. அந்த பாடலின் வரிகளை இப்போது இந்தியா-பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர்கள் இருவரும், அவர்களின் அம்மாக்களும் உயிர்பெறச் செய்துவிட்டனர். விளையாட்டுக்கு சாதி, மதம், இனம் மட்டுமல்ல, நாடுகள் என்ற வேறுபாடும் கிடையாது என்பதை இவர்கள் உலகத்துக்கே எடுத்துக்காட்டிவிட்டனர்.
இப்போது ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்துவிட்டது. கடந்த முறை ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றிருந்தது. இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கம் கிடைக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல விளையாட்டுகளில் பதக்க கனவு பறிபோய்விட்டது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் இதுவரை 90 மீட்டர் தூரத்தை தாண்டி ஈட்டி எறிந்ததில்லை. ஆனால், அவரை எதிர்த்து இறுதிப்போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்ததோடு தங்கப் பதக்கத்தையும் வென்றார். 1984-ம் ஆண்டு அமெரிக்க நகரமான லாஸ் ஏஞ்சல்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், ஆக்கி விளையாட்டில் பாகிஸ்தான் தங்கம் வென்றிருந்த நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது நதீம் தங்கம் வென்று தனது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, முதல் வெள்ளிப்பதக்கத்தை நாட்டுக்கு பெற்றுத்தந்தார். நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் எல்லைகள் கடந்த நண்பர்கள் மட்டுமல்லாது, சகோதரர்களைப் போல பழகிவந்தனர். கடந்த ஆண்டு நடந்த உலக தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம், அர்ஷத் நதீம் வெள்ளிப் பதக்கங்களை பெற்றனர். அப்போது, நீரஜ் சோப்ரா இந்திய தேசிய கொடியை கைகளில் விரித்து நின்றபோது, அவருடன் சேர்ந்து நின்றவர், அர்ஷத் நதீம். 5 மாதங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிக்கு ஈட்டி வாங்கக்கூட பணம் இல்லாமல் அர்ஷத் நதீம் தவித்தபோது, நீரஜ் சோப்ரா ஆதரவு குரல்கொடுத்து, "அவருக்கு பாகிஸ்தான் அரசாங்கமும் நிறுவனங்களும் நிதியுதவி வழங்கவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
இப்போது நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி, "தங்கம் வென்ற அர்ஷத் நதீமும் என் மகனைப் போன்றவர்தான்" என்று கூறியது, இருநாட்டு விளையாட்டு ரசிகர்களை நெகிழச் செய்தது. இதுபோல, அர்ஷத் நதீமின் தாயார் ரஜியா பர்வீனும், "நீரஜூம் என் மகன்தான். அவரும் நிறைய பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். அவர் என் மகனுக்கு நண்பர் மட்டுமல்ல சகோதரரும்கூட. நீரஜ் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்" என்று பாசத்துடன் கூறியது, தாய்மையின் உன்னதத்தை பறை சாற்றுகிறது. களத்தில்தான் இந்தியா-பாகிஸ்தான் என்று எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும், களத்துக்கு வெளியே பாசமுள்ள சகோதரர்கள் என்பதை இரு வீரர்களும், அவர்களின் அம்மாக்களும் உணர்த்தியது மனிதநேயத்தின் வெளிப்பாடு.